பீஜிங்: குழந்தை பிறப்பு விகிதம் குறைவதை கட்டுப்படுத்த, திருமணம் செய்வதை எளிதாக்கவும், டைவர்ஸ் செய்வதை கடினமாக மாற்றவும், சீனா அரசு திட்டமிட்டுள்ளது.உலக மக்கள் தொகையில் முன்னணியில் இருந்து வந்த சீனா, கடந்த 40 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளால், அதை கட்டுப்படுத்தியுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும், அதன் மூலம் அந்நாட்டுக்கு புதிய பிரச்னைகள் எழுந்துள்ளன.இதனால், ஒட்டு மொத்தமாக சீனாவில் இளைய தலைமுறையினர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது; போதாக்குறைக்கு, கோவிட் தொற்று காரணமாகவும், சீனாவில் லட்சக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இதனால் எதிர்காலத்தில் பல கிராமங்கள், நகரங்கள் வசிக்க ஆளற்றதாகி விடும் என்ற கவலை அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண, விதிகளை தளர்த்தி, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்தாலும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை; மாறாக இறப்பு விகிதமே உயர்ந்தது.குழந்தை பிறப்பு குறைந்து போனதற்கு பல காரணங்களை அந்நாட்டினர் கூறுகின்றனர். ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பதில்லை. போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ஆண்களில் பலர் திருமணம் செய்ய தயக்கம் காட்டுகின்றனர். பெண்கள், வேலைக்கு சென்று சம்பாதிப்பதால், திருமணம் செய்வதை தள்ளிப்போடுகின்றனர்; அல்லது தயக்கம் காட்டுகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று அந்நாட்டு அரசு தலையை பிய்த்துக்கொள்கிறது. மக்கள்தொகை
தற்போதைய சீன மக்கள் தொகை 140.9 கோடி. 2024ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 34 லட்சம் பேர் திருமணத்திற்காக பதிவு செய்துள்ளனர் . இது ஒரு வருடத்திற்கு முன் இருந்ததை விட 12 சதவீதம் குறைவு. இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் சீனாவில் வயதானவர்களே அதிகளவு இருப்பர் என்கிறது புள்ளி விவரம்.விவாதம் கிளம்பியது!
இதற்கு தீர்வாக, டைவர்ஸ் செய்வதை கடினமாக்கவும், திருமணத்தை எளிதாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அவ்வளவு எளிதில் நீதிமன்றத்தில் டைவர்ஸ் கிடைக்காது; அதே நேரம் திருமணம் செய்வதாக இருந்தால், தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும்.அரசின் இந்த முடிவுகள் சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. தனிமனித சுதந்திரம் பாதிக்கும். பிடிக்காத மனைவியுடன் கட்டாயமாக வாழும் சூழ்நிலை உருவாகும்' என அந்நாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சலுகைகள்!
மக்கள்தொகை ஆய்வாளர் யாபு கூறியதாவது: 'அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகமாக இருப்பதால், பல இளைஞர்கள் திருமணம் செய்து குடும்பத்தைத் துவங்க வேண்டாம் என்று தேர்வு செய்கிறார்கள். கூடுதலாக, அதிகமான பெண்கள் நன்கு படித்தவர்களாகவும், நிதி ரீதியாக சுதந்திரமாகவும் மாறுகிறார்கள். இதனால் அவர்கள் ஆண் துணையை தேடாமல், தனிப்பட்ட சுதந்திரத்தை விரும்புகின்றனர். வரிக் குறைப்பு
திருமணம் செய்வோருக்கு மலிவான விலையில் வீடுகள், வரிக் குறைப்புகள் மற்றும் ரொக்கப் பணம் உள்ளிட்ட சலுகைகள் மூலம் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது. பெண்கள் பாரம்பரிய முறைக்கு மாற வேண்டும். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.விசாரணை
விவாகரத்து மற்றும் குடும்ப வழக்கறிஞர் ஜாங் வென் கூறியதாவது: 'சீனாவில் விவாகரத்து செய்வது கடினம். நீங்கள் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தாலும், நீண்ட காலம் நிலுவையில் இருக்கிறது. தற்போது சீனா அரசே இப்படி ஒரு முடிவு செய்துள்ளதால், விவாகரத்துக்கு ஆதரவாக இனி நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்காது' என்றார்.