சமூக ஊடக தடையில் யுடியூப்பையும் சேர்க்க முடிவு
சிட்னி: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடையில் யுடியூப்பையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதும் இளம் தலைமுறையினர் இடையே சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது. பள்ளிக் குழந்தைகளும் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடப்பதால் அவர் களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மன ரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல குற்றச் செயல்களுக்கும் வழிவகுக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதன்படி, 16 வயதுக்குட்பட்டோர் 'டிக்டாக், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது. இந்த வரிசையில் தற்போது யுடியூப்பையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடையின் கீழ், யுடியூப் வீடியோக்களை பார்க்க முடியும். ஆனால் பதிவேற்றம் செய்யவோ, யுடியூப் கணக்கை வைத்திருக்கவோ அனுமதி கிடையாது.