ஹசாரே ஆதரவாளர்கள் துபாயில் கைது
துபாய் : இந்தியாவில், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை ஆதரித்து, துபாயில் ஊர்வலம் சென்ற எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். ஊழலை எதிர்க்கும் அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, துபாயில் கடந்த 20ம் தேதியன்று, அனுமதியின்றி ஊர்வலமாகச் சென்ற ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 22ம் தேதியன்று, அல்மாம்சார் கடற்கரையில் 150 பேர் ஒன்று கூடியிருந்தனர். இவர்கள் கைகளில் இந்தியக் கொடிகளையும், பதாகைகளையும் தாங்கி, அன்னா ஹசாரேக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி, ஊர்வலம் செல்ல முயன்றனர். அப்போது, அங்கு வந்த துபாய் போலீசார், கூட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ள தலைவர்கள் மட்டும் ஊர்வலமாகச் செல்லும்படியும், மற்றவர்கள் இந்த இடத்திலிருந்து சென்று விட வேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து, ஊர்வலம் சென்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். அனுமதியில்லாமல், சட்ட விரோதமாக ஊர்வலம் செல்ல முயன்றதாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.