உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேர்தலில் அமெரிக்க தலையீடு குறித்து... விசாரணை! டிரம்ப் குற்றச்சாட்டில் மத்திய அரசு அதிரடி

தேர்தலில் அமெரிக்க தலையீடு குறித்து... விசாரணை! டிரம்ப் குற்றச்சாட்டில் மத்திய அரசு அதிரடி

புதுடில்லி: இந்திய தேர்தலில் தலையிட்டு வேறு யாரையோ வெற்றி பெற செய்ய, அமெரிக்கா வழங்கிய, 182 கோடி ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருப்பது கவலை அளிப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடப்பதாகவும் நம் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின், அமெரிக்க அரசு துறைகளில் நடக்கும் வீண் செலவுகளை குறைத்து, துறையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில், டி.ஓ.ஜி.இ., எனப்படும், அமெரிக்க அரசு செயல்திறன் துறை என்ற அமைப்பை உருவாக்கினார்.

ஆய்வு

இந்த அமைப்பு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், யு.எஸ்.ஏ.ஐ.டி., எனப்படும், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் வழங்கி வரும் நிதி உதவிகளை டி.ஓ.ஜி.இ., ஆய்வு செய்தது.அப்போது, யு.எஸ். ஏ.ஐ.டி., அமைப்பு பல்வேறு நாடுகளுக்கும், 4,180 கோடி ரூபாய் நிதி அளித்து வருவது தெரியவந்தது. அதில், இந்திய தேர்தல்களுக்காகவும், வங்கதேச அரசியல் சூழ்நிலைகளை சீரமைக்கவும் நிதி வழங்கப்பட்டது தெரியவந்தது.இந்திய தேர்தல்களின் போது, ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக, யு.எஸ்.ஏ.ஐ.டி., வழங்கி வரும், 182 கோடி ரூபாய் நிதியை நிறுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:

இந்திய தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரிப்பது குறித்து அமெரிக்கா ஏன் கவலைப்பட வேண்டும்? இந்த பணத்தை பெற்றவர்கள் அதை வைத்து என்ன செய்வார்கள்?அதை செலவு செய்வதுடன், இந்த பணத்தை அளித்தவர்களுக்கு அதில் பங்கு தருவார்கள். இது ஒரு மிகப்பெரிய மோசடி திட்டம்.

தேர்தல் நடைமுறை

இந்த தொகை வாயிலாக, இந்திய தேர்தலில் வேறு யாரையோ வெற்றி பெறச் செய்ய முந்தைய பைடன் அரசு சதி செய்துள்ளது. இது பற்றி உடனடியாக இந்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.யு.எஸ்.ஏ.ஐ.டி., வழங்கிய நிதியை யார் பெற்றுக் கொண்டனர் என மத்திய அரசு தரப்பு கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் குறித்து நம் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:நம் நாட்டு தேர்தல் நடைமுறையில் வெளிநாட்டு தலையீடு இருப்பது கவலை அளிக்கிறது. குறிப்பாக, நம் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு அமைப்பு கள் தலையிட்டதாகக் கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் விசாரணை அமைப்புகள் இது தொடர்பான விசாரணையை நடத்தி வருகின்றன. யு.எஸ்.ஏ.ஐ.டி.,யிடமும் பல்வேறு விபரங்களை கேட்டுள்ளோம். விரைவில் தகவல்கள் பெறப்படும். இது தொடர்பாக விரிவான தகவல்கள் தெரியும் வரை, தற்போதைய நிலையில் வெளிப்படையாக கருத்து கூறுவது சரியாக இருக்காது. விசாரணை முடிந்த பின், இதுகுறித்த விபரங்கள் முறைப்படி தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இந்தியாவில் அமைதியை சீர்குலைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து நிதி அனுப்பப்பட்டதாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன. கடந்தாண்டு லோக்சபா தேர்தல் நடப்பதற்கு முன்னதாக, 2023 மார்ச்சில் லண்டன் சென்ற ராகுல், இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும்படி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். -- அமித் மாள்வியா

செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

கடந்த, 2012ல், காங்., ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவிலிருந்து நிதி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்குப்பின், 2014ல் நடந்த தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றது. பா.ஜ., வெற்றி பெறுவதற்கு இந்த பணம் பயன்படுத்தப்பட்டதா? ஏராளமான மத்திய விசாரணை அமைப்புகள் உள்ளன. அமெரிக்க நிதி குறித்து இந்த அமைப்புகள் விசாரிக்காதது ஏன்?-பவன் கெராசெய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை