பொருளாதார மீட்சிக்கான உதவி தொடரும் இலங்கை அதிபரிடம் ஜெய்சங்கர் உறுதி
கொழும்பு, ஒரு நாள் பயணமாக இலங்கை சென்ற நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் புதிய அதிபர் அனுர குமாரா திசநாயகேவை சந்தித்து பேசினார். அப்போது, “இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்,” என உறுதியளித்தார்.நம் அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமாரா திசநாயகே வெற்றி பெற்று, கடந்த மாதம் 23ல் அதிபராக பதவி ஏற்றார். புதிய அதிபரை சந்திக்கும் நோக்கில் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒரு நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார்.ஒத்துழைப்புஇலங்கை வெளியுறவுத்துறை செயலர் அருணி விஜேவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய துாதர் சந்தோஷ் ஜா ஆகியோர் கொழும்பு விமான நிலையத்தில் ஜெய்சங்கரை வரவேற்றனர்.பின், அதிபர் அனுர குமாரா திசநாயகேவை சந்தித்து ஜெயசங்கர் பேசினார். அப்போது, நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி சார்பில், புதிய அதிபருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'இருநாடு மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக இந்தியா- - இலங்கை உறவு மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டன' என, குறிப்பிட்டுள்ளார்.அதிபர் திசநாயகே வெளியிட்டுள்ள பதிவில், 'சுற்றுலா, எரிசக்தி, முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விவாதித்தோம். இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவின் ஆதரவை ஜெய்சங்கர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.பிரதமருடன் சந்திப்புமீன்பிடி, பாதுகாப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டது' என, குறிப்பிட்டுள்ளார்.அதிபர் உடனான சந்திப்பை தொடர்ந்து, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.அதன் பின், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜிதா ஹெராத்தை சந்தித்த ஜெய்சங்கர், இந்தியா- - இலங்கை கூட்டுறவின் பல்வேறு பரிமாணங்களை மதிப்பாய்வு செய்தார். இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் சந்தித்துப் பேசினார்.
சிங்கள மொழியில் புத்தகம்
அமைச்சர் ஜெய்சங்கர் எழுதி, 2022 மே மாதம் வெளியான, 'தி இந்தியா வே: ஸ்ட்ராடஜீஸ் பார் ஆன் அன்சர்டெய்ன் வேர்ல்ட்' என்ற புத்தகம், சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதன் முதல் பிரதியை, ஜெய்சங்கர் நேற்று பெற்றுக் கொண்டார். புத்தகத்தை வெளியிட்ட, 'பாத்பைண்டர்' அறக்கட்டளைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
ஷாங்காய் மாநாட்டுக்காக
பாகிஸ்தான் பயணம்இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா உள்ளிட்ட 10 நாடுகள் அங்கம் வகிக்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, வரும் 15, 16 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடக்கவுள்ளது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறுகையில், “இஸ்லாமாபாதில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க நம் நாட்டிலிருந்து செல்லும் குழுவுக்கு, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை வகிப்பார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மட்டுமே நம் குழு பாகிஸ்தான் செல்கிறது,” என்றார். கடந்த 2019ல், பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை, நம் விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தகர்த்தன. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. நம் நாட்டின் பிரதிநிதிகள் யாரும் பாகிஸ்தான் செல்லவில்லை. இந்த கசப்பான சூழலுக்கு பின், தற்போது தான், நம் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் செல்ல உள்ளார். கடைசியாக, 2015ல் அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானுக்கு சென்றார். அதன்பின் தற்போது தான், நம் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் செல்கிறார்.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இடையேயான பிராந்திய உறவை பலப்படுத்துவதில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் எந்த பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, தற்போது நம் வெளியுறவு அமைச்சர் பாக்., செல்ல உள்ளதாக வெளியறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.