| ADDED : ஜன 02, 2026 12:24 AM
டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்னதாக, 6.0 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் பதிவானது; ஆனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கிழக்காசிய நாடான ஜப்பானின், கிழக்கு கடற்கரைப் பகுதியான நோடா நகருக்கு அருகே, இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. புத்தாண்டுக்கு சற்று முன்பு இரவு 11:26 மணிக்கு 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நோடாவில் இருந்து கிழக்கே 91 கி.மீ., தொலைவில், 19.3 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது. நிலநடுக்கத்தின் போது உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இதேபோன்று திபெத்திலும், 3.4 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. கடந்த டிசம்பர் 8-ம் தேதி ஜப்பானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 50 பேர் வரை காயமடைந்தனர்.