உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மிகப்பெரிய தாமிர - தங்க இருப்புகள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

மிகப்பெரிய தாமிர - தங்க இருப்புகள் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

இஸ்லாமாபாத்: 'ரெகோ டிக்' திட்டம் வாயிலாக பாகிஸ்தான் பெரும் பணக்கார நாடாக மாற உள்ளது. இத்திட்டத்திற்கு, ஆசிய வளர்ச்சி வங்கி 3,579 கோடி ரூபாய் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாகாய் மலைகளில், உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத தாமிரம் மற்றும் தங்கம் இருப்புகள் உள்ளதாக நம்பப் படுகிறது. நிதியுதவி இவற்றை வெட்டி எடுக்கும் சுரங்க திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து, 3,579 கோடி ரூபாய் நிதியுதவியை பாகிஸ்தான் பெறுகிறது. 'ரெகோ டிக்' சுரங்க திட்டம் என்பது வட அமெரிக்க நாடான கனடாவின் 'பேரிக் கோல்டு' நிறுவனம், பாகிஸ்தான் அரசு மற்றும் பலுசிஸ்தான் மாகாண அரசு இணைந்த கூட்டு நிறுவனமாாகும். இத்திட்டத்தில், பேரிக் கோல்டு நிறுவனம், 50 சதவீத பங்கும், பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாண அரசுகள் தலா 25 சதவீத பங்கையும் கொண்டிருக்கும். ரெகோ டிக் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 57,420 கோடி ரூபாயாகும். சமீபத்திய ஆய்வின்படி, ரெகோ டிக் சுரங்கத்தில் 15 லட்சம் டன் தாமிரம் மற்றும் 7.37 லட்சம் கிலோ தங்கம் இருப்பு உள்ளதாக தெரிகிறது. இது உலகின் மிக குறைந்த விலையில் தாமிர உற்பத்தி செய்யும் சுரங்கங்களில் ஒன்றாகவும், உலகின் ஐந்தாவது பெரிய தாமிர சுரங்கமாகவும் மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. உற்பத்தி ரெகோ டிக் திட்டத்தின் முதல்கட்டத்தின்படி, 2028ம் ஆண்டில் உற்பத்தி துவங்கும். இதன் ஆண்டு இலக்கு 2.40 லட்சம் டன் தாமிரம் மற்றும் 8,505 கிலோ தங்கம் ஆகும். இரண்டாம் கட்டத்தில் உற்பத்தி ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் மற்றும் 14,175 கிலோ தங்கமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்கத்தின் ஆயுட்காலம் 37 ஆண்டுகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆயுட்காலத்தில் பாகிஸ்தான், இந்திய ரூபாய் மதிப்பில் 6.53 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அந்நாட்டின் மிகப்பெரிய அன்னிய நேரடி மு தலீடுகளில் ஒன்றாகும் . இது அந்நாட்டின் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை உருவாக்க உதவும் என கூறப்படுகிறது. மற்றொரு புறம், கராச்சியில் இருந்து ரோஹ்ரி வரையிலான 500 கி.மீ., நீள ரயில் பாதை சீரமைப்புக்கு சீனா நிதியுதவி அளிப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், இத்திட்டத்திற்கான நிதியளிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இதற்கு தேவையான 17,400 கோடி ரூபாய் நிதியுதவியை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியுடன் பாகிஸ்தான் தற்போது பேச்சு நடத்தி வருகிறது. ரெகோ டிக் சுரங்கத்தில் இருந்து தாமிர தாதுக்களை கொண்டு செல்ல இந்த ரயில் பாதை சீரமைப்பு அவசியம் என்பதால், சீனாவின் நிதியுதவியில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க பாகிஸ்தான் ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியை நாடியுள்ளது.ரோஹ்ரி வரையிலான இந்த ரயில் பாதை ரெகோ டிக் சுரங்கத்தில் இருந்து வரும் தாமிர தாதுக்களை துறைமுகம் வரை கொண்டு செல்லும்.

இந்தியாவின் நல்லெண்ணம்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையிலும், நல்லெண்ண அடிப்படையில், தாவி நதியில் வெள்ள எச்சரிக்கை குறித்து இந்திய துாதரக அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதன் மூலம், சிந்து நதி படுகையில் உள்ள ஆறுகளின் நீர் மட்டத் தரவையும் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்வதை இந்தியா நிறுத்தியது. ஏற்கனவே நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் கனமழையால், 800 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அங்கு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. இந்தநிலையில் ஜம்மு - காஷ்மீரிலும் கனமழை பெய்ததால் தாவி ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ள பாதிப்பில் பாகிஸ்தான் ஏற்கனவே சிக்கித் தவித்து வருவதால், பகையை மறந்து நல்லெண்ண அடிப்படையில் இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு, அங்குள்ள நம் துாதரக அதிகாரிகள் வெள்ள அபாயம் தொடர்பான தகவலை பகிர்ந்தனர். இதன் அடிப்படையில், தாவி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை எச்சரித்து, பாகிஸ்தான் வெளியேற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
ஆக 26, 2025 18:48

ஐயா, இந்தியாவின் வருடந்திர பட்ஜெட் ரூ. 40 லட்சம் கோடி இதற்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளவும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை