மிஷின் லேர்னிங் ஆய்வாளர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்த உதவும் கிளை அமைப்பான, 'மிஷின் லேர்னிங்' தொடர்பான ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்ட, அமெரிக்க மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் இருவர், இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர்.ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், பல துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதாக இது கருதப்படுகிறது.இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் பெறுவோர் குறித்த விபரங்கள் வெளியீடு நேற்று முன்தினம் துவங்கியது. முதலில் மருத்துவ துறைக்கான விருது பெறுவோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெறுவோர், நேற்று அறிவிக்கப்பட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்பீல்டு, கனடாவைச் சேர்ந்த ஜெப்ரி ஹின்டன் ஆகிய பேராசிரியர்கள், விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.இருவருக்கும், 9.23 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும். வரும் டிச., 10ல் ஆல்பிரட் நோபலின் பிறந்த நாளில் நடக்கும் விழாவில், இந்த விருது வழங்கப்படும்.மிஷின் லேர்னிங் எனப்படும் கணினிக்கு கற்றுத்தருவது தொடர்பான ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக, இவர்கள் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, உலகெங்கும் தற்போது பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. பல துறைகளில் இது வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்துக்கு அடிப்படையான, குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக தனக்கு கிடைக்கும் தகவல்களில் இருந்து கணினி கற்பதே, மிஷின் லேர்னிங் எனப்படுகிறது. இதை கட்டமைப்பதில் இவர்களுடைய ஆராய்ச்சிகள் பெரிய அளவில் உதவியுள்ளன.