இஸ்லாமாபாத்: 'இந்தியாவுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்வதன் மூலம், ஜம்மு, காஷ்மீர் உட்பட இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளில் முன்னேற்றம் காண முடியும்,' என பாக்., பிரதமர் யூசுப் கிலானி தெரிவித்துள்ளார்.
பாக்., வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கவுர், தனது இந்திய சுற்றுப் பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் நாடு திரும்பினார். இந்தச் சுற்றுப் பயணம் குறித்து, பாக்., பிரதமர் கிலானியை நேற்று நேரில் சந்தித்து, விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக, பாக்., பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை தொடர்வதால், ஜம்மு, காஷ்மீர் உட்பட, கவலைதரும் பிரச்னைகளில் விரைவான முன்னேற்றம் காண முடியும். இதுபோன்ற சமரசப் பேச்சுவார்த்தைகளின் மூலம், இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகளில், இருதரப்பு கண்ணோட்டத்தையும் புரிந்துகொள்ள முடியும். இருதரப்பு இடையிலான உறவை மேம்படுத்த, சமரசப் பேச்சுவார்த்தைகள் உதவும். இந்தியா உட்பட அண்டை நாடுகள் அனைத்துடனும், நட்புறவை மேம்படுத்தவே, பாக்., விரும்புகிறது. பாக்.,கில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். அதன்படி, அவரை பாக்., வருமாறு, பிரதமர் கிலானி அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், அதிபர் சர்தாரி வெளியிட்ட அறிக்கையில், 'ஹினா ரப்பானியின் இந்திய சுற்றுப் பயணம் திருப்தியளிக்கிறது. இந்தியா மற்றும் பாக்., இடையேயான பிரச்னைகளில், விரைவாக, அதேசமயம் சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்காக, இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வரவேற்கக்கூடியவை,' என கூறியுள்ளார்.