உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாராலிம்பிக் இன்று ஆரம்பம்; ஜொலிக்குமா இந்தியா

பாராலிம்பிக் இன்று ஆரம்பம்; ஜொலிக்குமா இந்தியா

பாரிஸ் : பாராலிம்பிக் போட்டி இன்று வண்ணமயமான விழாவுடன் ஆரம்பமாகிறது. மனஉறுதியுடன் வீரர், வீராங்கனைகள் சாதிக்க காத்திருக்கின்றனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது. -செப். 8ல் நிறைவு பெறுகிறது. 1௨ நாள் நடக்கும் இந்த விளையாட்டு திருவிழாவில், 169 நாடுகளை சேர்ந்த 4,400 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 84 பேர், 12 வகையான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். துவக்க விழா அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை சுமித் அன்டில், பாக்யஸ்ரீ ஜாதவ் (குண்டு எறிதல்) ஏந்தி வர உள்ளனர்.

துவக்க விழா புதுமை

பிரான்சின் மையப்பகுதியில் உள்ள பிளேஸ் டி லா கான்கார்ட் சதுக்கத்தில் துவக்க விழா நடக்க உள்ளது. இதன் இயக்குநர் தாமஸ் ஜாலி கூறுகையில், ''மாற்றுத் திறனாளிகள் உட்பட 150 நடன கலைஞர்களின் ஆடல், பாடல், 'லேசர் ஷோ' என புதுமையான நிகழ்ச்சிகளை காணலாம்.முதல் முறையாக திறந்த வெளியில் பாராலிம்பிக் துவக்க விழா நடக்க உள்ளது. 65,000 பேர் அமர்ந்து ரசிக்க உள்ளனர். பாராலிம்பிக் ஜோதி ஏற்றப்படும்,'' என்றார்.பாராலிம்பிக் போட்டிகள் மனிதர்களின் மனஉறுதி, விடாமுயற்சியை நிரூபிக்கும் களம். விபத்தில் பாதிப்பு, பிறவியில் குறைபாடு, பார்வைதிறன் இல்லாதது என ஒவ்வொரு வீரர், வீராங்கனையின் வாழ்விலும் ஏதாவது ஒரு சோகம் புதைந்திருக்கும். இதிலிருந்து லட்சியத்துடன் போராடி முன்னேறியுள்ளனர். பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றனர்.எகிப்தின் வலு துாக்கும் வீரர் ஷெரிப் ஒஸ்மான், 41. நான்காவது தங்கம் வெல்லும் கனவில் உள்ளார். 9 மாத குழந்தையாக இருந்த போது போலியோவால் பாதிக்கப்பட்டார். இவர் கூறுகையில், 'எனது தசைகளில் இருந்து பலம் கிடைப்பதில்லை. மனதில் இருந்து பலம் கிடைக்கிறது. உங்களை நம்பினால், கனவுகளை எட்டிப் பிடிக்கலாம்,'' என்றார்.

முதல் திருநங்கை

பாராலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற பெருமை பெறுகிறார் இத்தாலியின் வேலன்டினா பெட்ரில்லோ 50. இவரது 14 வயதில் பார்வை குறைபாடு ஏற்பட்டது. பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் பங்கேற்பது கூடுதல் சிறப்பு.

மாரியப்பன்

உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் 29. தமிழகத்தின் சேலம் பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர். விபத்தில் சிக்கி வலது கால் பாதிக்கப்பட்டது. 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கம், 2021 டோக்கியோவில் வெள்ளி வென்றார். சமீபத்தில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் முதன் முறையாக தங்கம் வசப்படுத்தினார். தற்போது மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் களமிறங்கும் மாரியப்பன், இம்முறை தங்கம் வென்று திரும்ப காத்திருக்கிறார்.

சுமித் அன்டில்

ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் 26. ஹரியானாவின் சோனிபட்டை சேர்ந்தவர். விபத்து காரணமாக இடது கால் கீழ்பகுதி இல்லை. 2021 டோக்கியோவில் உலக சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார். இம்முறை குறைந்தது 75 மீ., துாரம் எறிந்து தங்கம் வெல்ல உள்ளார்.

அவனி லெஹரா

துப்பாக்கிசுடுதல் வீராங்கனை அவனி லெஹரா 22. ஜெய்ப்பூரை சேர்ந்த இவர், கார்விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டார். டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) தங்கம், வெண்கலம் என இரண்டு பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். இந்தியாவுக்கு மீண்டும் தங்கம் கொண்டு வரலாம்.

பவினா படேல்

டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் 37. குஜராத்தை சேர்ந்தவர். போலியோ பாதிப்பு காரணமாக நடக்க முடியாது. கடந்த 2021ல் கலக்கினார். ஒலிம்பிக், பாராலிம்பிக் டேபிள் டென்னிசில் பதக்கம் (வெள்ளி) வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். மீண்டும் பதக்கம் வெல்ல காத்திருக்கிறார்.

ஷீத்தல் தேவி

பாராலிம்பிக் வில்வித்தையில் பங்கேற்கும் இரு கைகள் இல்லாத முதல் வீராங்கனை ஷீத்தல் தேவி 17. ஜம்மு அண்டு காஷ்மீரை சேர்ந்தவர். இம்முறை அசத்தும் பட்சத்தில் பாராலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வில்வித்தை வீராங்கனை என சாதிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை