நியூயார்க்: ஏ.ஐ., தொழில்நுட்பம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, கடந்த 21ம் தேதி 3 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். தொடர்ந்து, பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேசிய அவர், அமெரிக்கா வாழ் இந்தியர்களை சந்தித்தும் உரையாற்றினார்.இந்த நிலையில், நியூயார்க்கில் உள்ள நட்சரத்திர ஓட்டலில் உலகின் முன்னணி நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, ஐ.பி.எம்., நிறுவனத்தின் சி.இ.ஓ., அரவிந்த் கிருஷ்ணா, மாடர்னா நிறுவனத்தின் தலைவர் நவ்பர் ஆபியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, இந்திய மக்கள் பலனடையும் விதமாக, ஏ.ஐ.,(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவில் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.இந்த சந்திப்பிற்கு பிறகு, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை கூறியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சியில் கூகுள் நிறுவனத்தின் முயற்சிகளும், இந்தியாவின் பார்வையும் ஒரே மாதிரிதான் உள்ளது. இந்தியாவில் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இதன்மூலம், எங்களின் பிக்ஸல் போன் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை பெருமையாக உணர்கிறோம்.இந்தியாவுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார். இதன்மூலம், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மீதான சவால்கள் அதிகரித்துள்ளன. ஏ.ஐ., தொழில்நுட்பம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயங்களில் தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை மக்களுக்கு நன்மையுள்ளதாக மாற்றுவதே அவரது எண்ணமாக உள்ளது, எனக் கூறினார்.