| ADDED : டிச 01, 2025 10:09 PM
புதுடில்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு துணை நிற்போம் என்று அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 370 பேர் மாயமாகியுள்ளனர். பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையடுத்து அங்கு, அவசரநிலையை, அந்த நாட்டின் அதிபர் அநுர குமார திசநாயகே அறிவித்துள்ளார்.புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில், 21 டன் நிவாரணப் பொருட்களையும், மற்றும் 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உதவி செய்து வருகின்றனர்.இந்த நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார். மேலும், 'ஆப்பரேஷன் சாகர் பந்து'வின் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கத் தயார் என்று அவர் உறுதியளித்தார்.அப்போது, நிவாரணப் பொருட்களையும், மீட்பு படையினரையும் அனுப்பி உதவிய பிரதமர் மோடிக்கு, இலங்கை மக்களின் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே கூறினார்.