தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயார்! போர் நிறுத்தத்துக்கு உலக நாடுகள் அழைப்பு
பெய்ரூட், : பேச்சு நடத்துவதற்கு வசதியாக, 21 நாட்களுக்கு போர் நிறுத்தும் செய்யும்படி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதே நேரத்தில், லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது.ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், அதற்கு ஆதரவான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதலை, மேற்காசிய நாடான இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்களில், 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.கூட்டறிக்கைஇது, மேற்காசியாவில் முழு போர் சூழ்நிலையை உருவாக்கிவிடும் என, உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இதையடுத்து, பேச்சு நடத்துவதற்கு வசதியாக, 21 நாட்களுக்கு போரை நிறுத்தி வைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளன.அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்டவை இது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டன.அதே நேரத்தில் இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், மேற்காசியாவில் முழுநேர போர் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.இதற்கு முன்னதாக வெளியிட்ட செய்தியில், வடக்கு இஸ்ரேல் எல்லையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு இயல்பாக இருக்கும் வரை, நாட்டின் வடக்கே உள்ள லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும் என, நெதன்யாகு கூறியுள்ளார்.இதுபோலவே, காசாவில் இலக்கை எட்டும் வரையில் ராணுவ நடவடிக்கை தொடரும் என, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருக்கும்படி, தன் வீரர்களை இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.இதற்கிடையே, லெபனான் - சிரியா எல்லையில் உள்ள பகுதியில், இஸ்ரேல் ராணுவம் நேற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. வான்வழி தாக்குதல்அதில் இருந்த, 23 சிரியா அகதிகள் கொல்லப்பட்டதாக லெபனான் கூறியுள்ளது. லெபனானின் பெய்ரூட்டில் நேற்று இரவு கடுமையான ராக்கெட் தாக்குதலை, இஸ்ரேல் ராணுவம் நடத்தியது.இதில், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பாதிப்பு குறித்த துல்லியமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின், 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.நேற்று முன்தினம் இரவு 75 இடங்களிலும், நேற்று 45 இடங்களிலும் இவ்வாறு வான்வழி தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.இதற்கிடையே இஸ்ரேல், பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் படை பிரிவு தலைவர் முகமது சுருர் கொல்லப்பட்டார்.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
லெபனானின் பெய்ரூட்டில் உள்ள இந்திய துாதரகம், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:லெபனானில் நடந்து வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதனால், லெபனானில் உள்ள இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முடிந்தவரை மிக விரைவாக அங்கிருந்து வெளியேறுவது சிறந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.