வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இழந்துவிட்டோம். அதற்கு முழுமுதல் காரணமே நீங்கள்தான். உங்கள் திமிர் பிடித்த இந்தியா மீதான அதிக வரிவிதிப்புத்தான். இப்பொழுது புலம்பி என்ன பயன்? இப்பவாவது இந்தியா மீதான வரியை குறைக்கப்பாருங்கள்.
வாஷிங்டன்: பிரதமர் மோடி, சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் ஒன்றாக இருக்கும் படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, 'இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்து விட்டோம்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பியுள்ளார். சமீபத்தில் சீனாவின் தியான்ஜின்னில் நடந்த, எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, அமெரிக்க அதிபர் டிரம்பின் அமைதியை கெடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். கடந்த ஜனவரியில் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே, உலக நாடுகள் மீது தன் வன்மத்தை கக்கி வருகிறார். அனைத்து நாடுகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என எண்ணிய டிரம்ப், உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதீத வரி விதிப்பை அறிவித்தார். சீனாவுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியும், இந்தியாவுக்கு 50 சதவீத வரியும் விதிப்பதாக அறிவித்தார். இதனால் உலக நாடுகளின் தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு ஒருபுறமிருக்க, இந்திய தொழில்துறையை பாதிப்பில் இருந்து மீட்க மாற்று வழிகளை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. இந்நிலையில், ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கும்படி சீனாவிடம் இருந்து இந்தியாவுக்கு அழைப்பு வந்தது. இதை ஏற்று, இரண்டு நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். உச்சி மாநாட்டின் இடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் மாநாட்டில் பங்கேற்ற பிற நாட்டு தலைவர்களுடன் மோடி நட்புறவுடன் உரையாடினார். குறிப்பாக, எல்லைப் பிரச்னையால் இடைவெளி விழுந்திருந்த சீனா - இந்தியாவுக்கு இடையேயான நட்புறவு மீண்டும் துளிர்த்தது. மாநாட்டில் சீனா, ரஷ்யா அதிபர்களுடன் மோடி இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது, உலக நாடுகளில் உள்ள அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது. மூன்று தலைவர்கள் இடையேயான நட்புறவு ஒரு செய்தியை உணர்த்துவதாக அமைந்தது. அமெரிக்க அதிபரின் வர்த்தக போருக்கு மத்தியில், இது ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது. மேலும் இது ஓர் புதிய உலக ஒழுங்கை பறைசாற்றுவதாக பேசப்பட்டது. உலக நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள எண்ணிய டிரம்பின் கனவுக் கோட்டையை தகர்ப்பதாக அமைந்திருந்தது. இதையடுத்து, இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்தார். இந்தியா உடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு என்றார்; மேலும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இறுதியாக, 'ட்ரூத்' சமூக ஊடகத்தில், ஷாங்காய் உச்சி மாநாட்டில் மூன்று நாட்டு தலைவர்களும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த டிரம்ப், 'இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் அமெரிக்கா இழந்து விட்டது' என புலம்பியிருக்கிறார். மேலும், அவர்களுக்கு நீண்ட மற்றும் வளமான எதிர்காலம் ஒன்றாக அமையட்டும் என டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இழந்துவிட்டோம். அதற்கு முழுமுதல் காரணமே நீங்கள்தான். உங்கள் திமிர் பிடித்த இந்தியா மீதான அதிக வரிவிதிப்புத்தான். இப்பொழுது புலம்பி என்ன பயன்? இப்பவாவது இந்தியா மீதான வரியை குறைக்கப்பாருங்கள்.