| ADDED : டிச 17, 2024 07:18 AM
வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமுற்றனர்.அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில், 17 வயது மாணவி ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவியும் உயிரிழந்துவிட்டார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சமீப காலமாக, அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. பயன்படுத்துவதற்கு எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள், மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.