உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு கடத்த அமெரிக்கா ஒப்புதல்

மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு கடத்த அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. மஹாராஷ்டிராவின் மும்பையில், 2008ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களில், நம் அண்டை நாடான பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லியும் ஒருவர். பயங்கரவாதியான இவருக்கும், இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் - இ - தொய்பா அமைப்புக்கும் உதவியதாக பாக்., வம்சாவளியைச் சேர்ந்த வரும் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த தொழிலதிபருமான தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2013ல் ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்காவிடம் நம் நாட்டு அரசு கோரிக்கை வைத்தது. இது தொடர்பான விசாரணையில், ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளிக்கும்படி லாஸ் ஏஞ்சலஸ் நகர நீதிமன்றத்துக்கு அமெரிக்க அரசு பரிந்துரைத்தது. இதையேற்று, ராணாவை நாடு கடத்த நீதிமன்றம் 2023ல் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ராணா முறையிட்டார். இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, தன்னை நாடு கடத்த தடை விதிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிமன்றத்திலும் ராணா மனு தாக்கல் செய்தார். இதையேற்ற நீதிமன்றம், ராணாவை நாடு கடத்த தடை விதித்து உத்தரவிட்டது. அதேநேரத்தில், நாடு கடத்தலுக்கு தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ராணா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தற்போது அனுமதி வழங்கி உள்ளது. இதன் வாயிலாக, நாடு கடத்தலுக்கு எதிராக ராணா மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !