உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கன் அமைச்சரின் பாக்., பயணம்; ஐ.நா., வாயிலாக தடுத்த அமெரிக்கா

ஆப்கன் அமைச்சரின் பாக்., பயணம்; ஐ.நா., வாயிலாக தடுத்த அமெரிக்கா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு செல்ல இருந்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை சேர்ந்த வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகியின் பயணத்தை, அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசில் வெளியுறவு அமைச்சராக இருக்கும் அமிர் கான் முத்தாகி, கடந்த 4ம் தேதி சுற்றுப்பயணம் செல்ல இருந்தார். கடந்த ஏப்ரலில் பாக்., வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக, இந்த பயணம் திட்டமிடப்பட்டது. இரு நாடுகளின் இந்த உறவுக்கு சீனா உதவி வருகிறது. இந்நிலையில், ஆக.4ம் தேதி பாகிஸ்தானுக்கு செல்ல இருந்த அமிர் கான் முத்தாகியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. ஆப்கனில் ஆட்சியில் இருக்கும் தலிபான்கள், பயங்கரவாத இயக்கம் என்பதால், அதில் அமைச்சர்களாக இருக்கும் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவர்கள், சர்வதேச தடைகளின் கீழ் இருக்கின்றனர். அவர்கள், எந்தவொரு வெளிநாட்டுக்கும் செல்ல, ஐ.நா., தடைகள் குழுவின் சிறப்பு ஒப்புதலை பெற வேண்டும். இதைப் பயன்படுத்தி, முத்தாகியின் பாகிஸ்தான் பயணத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் முக்கிய உறுப்பினரான அமெரிக்கா, ஐ.நா., தடைகள் குழுவில் அதிகாரத்துடன் இருக்கிறது. எனவே, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் 1988ம் ஆண்டு தீர்மானத்தின் படி, தலிபான் இயக்கத்தை சேர்ந்த முத்தாகியின் பயணத்துக்கு, ஐ.நா., வாயிலாக அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஆப்கான், பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நெருக்கத்துக்கு சீனா உதவி வருவதே, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் எனவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், 'வதந்திகளுக்கு எந்தவித கருத்துகளையும் தெரிவிக்க விரும்பவில்லை' என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் செய்தி தொடர்பாளர் சப்கத் அலிகான் கூறுகையில், “சில நடைமுறை சிக்கல்களால், ஆப்கானிஸ்தான் அமைச்சர் முத்தாகியின் பாகிஸ்தான் பயணம் தடைபட்டது. சிக்கல்களை தீர்க்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ''அவரது பாகிஸ்தான் வருகை தொடர்பாக, அதிகாரப்பூர்வ தேதி எதுவும் அறிவிக்கப் படவில்லை. எனவே, பயணம் ரத்து என்றோ, தள்ளி வைக்கப் பட்டது என்றோ கூறுவது தவறு,” என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை