வருண் சக்ரவர்த்தி சுழல் ஜாலம் வீண்! இந்திய அணியை வென்றது தென் ஆப்ரிக்கா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கெபேஹா: இரண்டாவது 'டி-20' போட்டியில் சுழலில் மிரட்டிய வருண் சக்ரவர்த்தி, 5 விக்கெட் வீழ்த்திய போதும், இறுதி கட்ட ஓவர்களில் இந்திய அணி சொதப்பியதால், தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி கெபேஹாவில், நேற்று(நவ.,10) நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார்.இந்திய அணி துவக்கத்தில் திணறியது. முதல் போட்டியில் சதம் விளாசிய சாம்சன், நேற்று யான்சென் வீசிய போட்டியின் 3வது பந்தில் 'டக்' அவுட்டானார். கோயட்சீ வீசிய இரண்டாவது ஓவரில் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் அபிஷேக். பவுன்சராக வந்த 5வது பந்தில் அபிஷேக் (4), யான்செனிடம் 'கேட்ச்' கொடுத்து திரும்பினார். சைம்லேன் பந்தில் கேப்டன் சூர்யகுமார் (4) அவுட்டானார். பின் கோயட்சீ பந்தில் திலக் வர்மா ஒரு சிக்சர் அடிக்க, மறுபக்கம் சைம்லேன் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் அக்சர் படேல்.இம்முறை பந்தை சுழற்றினார் மார்க்ரம். இதில் திலக் வர்மா (20) அடித்த பந்தை, அந்தரத்தில் பறந்து 'கேட்ச்' செய்து மிரட்டினார் மில்லர். அவ்வப்போது பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்த அக்சர் படேல் (27), துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார். இதன் பின் இந்திய அணியில் ரன் வேகம் அப்படியே மந்தமானது. தொடர்ந்து 31 பந்தில்ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படாத நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கும், 9 ரன்னில் நடையை கட்டினார். அர்ஷ்தீப் சிங், வந்த வேகத்தில் பீட்டர் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இந்திய அணி 17 ஓவரில் (101/6) 100 ரன்களை கடந்தது. யான்சென் வீசிய 18 வது ஓவரில், பாண்ட்யா 2 பவுண்டரி, 1 சிக்சர் அடிக்க, 14 ரன் கிடைத்தன. கடைசி பந்தில் பாண்ட்யா ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன் மட்டும் எடுத்தது. பாண்ட்யா (39), அர்ஷ்தீப் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.எளிய இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு ரிக்கிள்டன் (13), ஹென்ரிக்ஸ் ஜோடி துவக்கம் தந்தது. வருண் சக்ரவர்த்தி சுழலில் மார்க்ரம் (3) போல்டானார். தொடர்ந்து அசத்திய வருண், ஹென்ரிக்ஸ் (24), யான்சென் (7), கிளாசனை (2) அவுட்டாக்கினார். அடுத்து வந்த மில்லரை (0) ஒரே பந்தில் போல்டாக்கிய வருணுக்கு, இது 5வது விக்கெட்டாக அமைந்தது. தென் ஆப்ரிக்க அணி 13.2 ஓவரில் 72/6 ரன் எடுத்து திணறிய போது, இந்திய அணி இப்போட்டியில் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ஸ்டப்ஸ் (47), ஜெரால்டு கோட்சி (19) இருவரும், இறுதி கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடி, தென் ஆப்ரிக்க அணியை வெற்றி பெற வைத்தனர். இலக்கை 19 ஓவர்களில் எட்டிய தென் ஆப்ரிக்க அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 1 - 1 என சமன் செய்தது. ஆட்ட நாயகன் விருது ஸ்டப்ஸ்-க்கு வழங்கப்பட்டது. இரு அணிகளும் மோதும் 3வது போட்டி, செஞ்சூரியன் மைதானத்தில், வரும் 13ம் தேதி நடக்க உள்ளது. இது 'பெஸ்ட்'
சர்வதேச 'டி-20'ல் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி. நேற்று இவர், 4 ஓவரில் 17 ரன் கொடுத்து, 5 விக்கெட் சாய்த்தார். முன்னதாக டர்பன் (2024) போட்டியில் 3 விக்கெட் சாய்த்து இருந்தார்.