உள்ளூர் செய்திகள்

பவானிஸ் பிரசன்னாலயாவின் தேவான்ஷி நடன அரங்கேற்றம்

தில்லி நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நடன பள்ளி பவானிஸ் பிரசன்னாலயா. கடந்த இருபது வருடங்களாக செயல்படும் இப்பள்ளி மூலம் மாணவர்களின் அரங்கேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் வட இந்தியர்கள் என்பது குறிப்பிட வேண்டியதொன்று. இப்பள்ளி மாணவியும் குரு பவானி அனந்தராமனின் சிஷ்யருமான தேவான்ஷியின் பரதநாட்டிய அரங்கபிரவேசம் அண்மையில் தில்லி திரிவேணி கலையரங்கில் நடைபெற்றது. புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம் என்ற சம்பிரதாய முறைப்படி தனது அரங்கேற்ற நிகழ்வுகளை ஒவ்வொன்றாக தொடர்ந்தார். இத்தனை வருட பயிற்சி குருவின் பாடாந்தரம் கவனிப்பு அவரது நடனத்தில் வெளிப்பட்டது பூர்ண சந்திரிகாவில் ரூபக தாள வர்ணம் தியாகேசரின் பேரில் நாயகியின் அன்பை வெளிப்படுத்தும் பாவபூர்வ வரிகள். தேவான்ஷியின் விரிந்த அழகு கண்கள் பாவத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தின. மிகவும் கடினமான வர்ணத்தை சோர்வு என்பதே காட்டாமல் ஆரம்பம் முதல் முடிவு வரை சுகமாய் கொண்டு சென்றார். குரு சிஷ்யரின் உழைப்பும் இருவரின் ஈடுபாடும் உணரமுடிந்தது. இடைவேளைக்கு பிறகு லலிதா சகஸ்ரநாம ஆரம்ப ஸ்லோகம்.குரு பவானியின் நடன கோர்வை. "ஸ்மிதமுகீம்" கண்முன் அம்பாளின் புன்னகை முகம் காணமுடிந்தது. தூரனின் முரளீதர கோபாலா தொடர்ந்து மத்யமாவதியில் தில்லானாவுடன் தனது அரங்கேற்ற நிகழ்வுகளை நிறைவு செய்தார். அன்றைய அரங்கேற்றத்திற்கு நட்டு வாங்கம் குரு பவானி அனந்தராமன், வாய்ப்பாட்டு சுதா ரகுராமன், மிருதங்கம் சந்திரசேகர், வயலின் VSK அண்ணாதுரை, புல்லாங்குழல் ரகுராமன் ஆகியோர் கூட்டணியில் விழா அழகுற அமைந்தது. பாடகி சுதா ரகுராமன் கலை ஆர்வலர் மீனா வெங்கி இருவரும் அன்றைய நடனம் பற்றியும் பாடல்கள் தேர்ந்தெடுத்த விதம் பற்றியும் பேசினர். விழாவிற்கு எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் ராஷ்மி ஆனந்த் முதன்மை விருந்தினராக வந்திருந்து மிக அழகாக பேசினார். தனது கவிதை வரிகளில் தேவான்ஷிக்கு பொருத்தமானவற்றை வாசித்தது சிறப்பு . "நெருப்பு என்னுள் கனன்று கொண்டிருக்கிறது. ஜுவாலை வெளிவர காத்திருக்கிறது". ஆமாம் நாட்டிய மோகம் என்னும் ஜுவாலை தேவான்ஷியிடம் சுடர்விட்டு ஒளிர காத்திருப்பது உண்மைதான் - நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !