குடிக்கு அடிமையானவர்களை மீட்க போராடும் பார்வதம்மா
குடிப்பழக்கம் நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு என்று மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டு இருந்தாலும், 'குடி'மகன்கள் அதை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை. வீட்டின் தலைவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானால் அந்த குடும்பமே சிதைந்து விடுகிறது. குடிக்கு அடிமையான நபர்கள் தான் குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதில் இருக்கும் மீட்கும் முயற்சியில், பார்வதம்மா என்ற பெண் ஈடுபட்டு உள்ளார். இதற்காக மறுவாழ்வு மையத்தை நிறுவி உள்ளார்.இது குறித்து பார்வதம்மா கூறியதாவது:எனது சொந்த ஊர் சிக்கபல்லாபூரின் சிந்தாமணி அருகே கரியப்பள்ளி கிராமம். நான் சிறுமியாக இருந்த போது, எனது பெற்றோர் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகினர். இதனால் அவர்களின் அன்பு எனக்கு கிடைக்கவில்லை. ஒருமுறை தந்தை, தாய் சேர்த்து குடிபோதையில் என்னை தாக்கினர். கரியப்பள்ளியில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு நடந்தே சென்றேன்.மிகுந்த வறுமையில் இருந்த போதும், அரசு பள்ளியில் படித்தேன். மகளிர் கல்லுாரியில் பி.ஏ., முடித்து, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்தேன். அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. போதை, குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட வைக்கும், மறுவாழ்வு மையங்களில் சென்று பணியாற்றினேன். பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று போதை, குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். குடிக்காரர்களை அந்த பழக்கத்தில் இருந்து மீட்கும் நோக்கில், சிந்தாமணி ரூரல் படகவரஹள்ளியில் மறுவாழ்வு மையம் நடத்துகிறேன். பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூல் செய்கிறோம். பணம் கட்ட முடியாதவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறோம். குடியால் பாதிக்கப்பட்ட எனது பெற்றோரால் நான் பட்ட கஷ்டத்தை போன்று யாரும் கஷ்டம் அனுபவிக்க கூடாது என்பது எனது குறிக்கோள்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -