மண் பயன்படுத்தாமல் செடிகள் வளர்க்கும் பெண்மணி
- நமது நிருபர் -: பெ ங்களூரு ஜே.பி., நகர் எட்டாவது பேஸ் வெங்கடேஸ்வரா லே - அவுட்டில் வசித்து வருபவர் ஆன் வினயா தாமஸ். ஏவியேஷன் எனும் விமான போக்குவரத்து துறையில், 20 ஆண்டுகள் பணியாற்றியவர். பழங்கள், காய்கறிகளை இயற்கை முறையில் தாங்களே விளைவிக்க வேண்டும் என்று பலர் ஆர்வம் காண்பிப்பர். ஆனால் ஆன் வினயா தாமஸ், 'ஹைட்ரோபோனிக்ஸ்' எனும் மண்ணில்லா வேளாண் வளர்ப்பு குறித்து, ஓராண்டாக தனக்குள்ள சந்தேகங்களுக்கு, நிபுணர்களிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டார். அதன்பின், 2017ல் தன் வீட்டின் மொட்டை மாடியில் பசுமை தோட்டத்தை உருவாக்கி, அதற்கு, 'ஹோம்' எனும், 'ஹெவன் ஆன் மை எர்த்' பெயரிட்டு, வெற்றி பெற்றுள்ளார். மண்ணில்லா வேளாண்மையில், தன் வெற்றி பயணம் குறித்து ஆன் வினயா தாமஸ் கூறியதாவது: விமான போக்குவரத்து துறையில் கிட்டதட்ட 20 ஆண்டுகள் கையில் மடிக்கணினியுடன் பணியாற்றினேன். ஒரு கட்டத்தில் மன அழுத்ததில் இருந்து விடுபட வேண்டும் என்று விரும்பினேன். அதன்படி அப்பணியை ராஜினாமா செய்தேன். சிறு வயதில் எங்கள் வீட்டின் வளாகத்தில் இருந்த சிறிய தோட்டத்தை என் தாயார் பராமரிப்பதை பார்த்துள்ளேன். அது போன்று என் வீட்டுக்கு ரசாயனம் பயன்படுத்தாமல், தேவையான காய்கறிகள், பழங்களை விளைவிக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இதற்காக ஓராண்டு காலம் பல ஆய்வுகள், நிபுணர்களிடம் ஆலோசனைகள் கேட்டேன். அதன் பின்னரே, 'ஹைட்ரோபோனிக்ஸ் எனும் மண்ணில்லா வேளாண்மை' முறையை பற்றி தெரிந்து கொண்டேன். இது, மண்ணை பயன்படுத்தாமல், உரங்களை நீரில் சேர்த்து, அதனை பயன்படுத்தி, தாவரங்களை வளர்க்கும் முறையாகும். இதையடுத்து, 2017 ல் என் வீட்டின் மொட்டை மாடியில் பசுமை தோட்டம் அமைத்தேன். முதல் ஓராண்டுகள் சோதனையாகவே அமைந்தது. செடிகள் காய்ந்து போயின, அதை தடுக்க என்ன வழி என்பதை பல, 'யு டியூப்'களை பார்த்து தெரிந்து கொண்டேன். அதன் பின், செடிகள் காய்ந்து போகவில்லை. அப்போது தான், விவசாயிகளின் கஷ்டம் எனக்கு புரிந்தது. என்னுடைய முயற்சி, மற்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, முகநுாாலில் 'எச்.ஓ.எம்.இ.,' எனும் ஹோம் என்ற பெயரில் கணக்கு துவக்கினேன். அதில், ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரையிலான செயல்பாடுகளை விவரித்து வருகிறேன். என்னிடம் சந்தேகம் கேட்டு வருபவர்களுக்கும் விளக்கம் அளிக்கிறேன். அத்துடன், புதிதாக வளர்ந்த கீரைகளை, வீட்டின் உணவுக்கும் பயன்படுத்தி வருகிறேன். மற்றவர்களும் வாங்கி செல்கின்றனர். இந்த முயற்சியால் எனக்கு எந்த லாபமும் இல்லை. ஆனாலும், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி எனக்கு நிம்மதி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: ஞாயிற்று கிழமை தவிர மற்ற நாட்களில், காலை 11:30 முதல் இரவு 7:00 மணி வரை, இவரை சந்தித்து உங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் அல்லது homecafe.comஎன்ற இணையதளம் அல்லது 70228 32628 என்ற மொபைல் எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தன் வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கப்படும் செடிகள். (அடுத்த படம்) மாணவ - மாணவியருக்கு ஆன் வினயா தாமஸ் விளக்குகிறார். (கடைசி படம்) ஆன் வினயா தாமஸ். மாணவ - மாணவியருக்கு ஆன் வினயா தாமஸ் விளக்குகிறார்.