ஊட்டச்சத்துணவு தயாரிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் அனுஷா
- நமது நிருபர் - இன்றைய இளம் தலைமுறையினர், தொழில்நுட்பத்தில், சாப்ட்வேரில் திறன் பெற்றுள்ளனர். இதில், அடுத்த கட்டத்துக்கு செல்வது எப்படி என, எப்போதும் ஆலோசிப்பர். ஆனால், தட்சிண கன்னடாவின் இளம் பெண் ஒருவர், குழந்தை பெற்ற பெண்களின் நலனுக்கான சத்துணவை தயாரித்து, சாதித்து வருகிறார். தட்சிண கன்னட மாவட்டம், மூடபிரதேவை சேர்ந்தவர் அனுஷா ஆச்சார், 24. இவர், பி.இ., எலக்ட்ரிகல் பட்டதாரி. பொதுவாக பட்டப்படிப்பை முடித்தவர்கள், அரசு பணிக்கு முயற்சிப்பர். அல்லது அதிக ஊதியம் கிடைக்கும், தனியார் நிறுவனங்களில் பணியில் அமர்வர். விரும்பிய வேலை கிடைக்கும் வரை காத்திருப்பர். ஆனால், அனுஷாவுக்கோ, வேலை தேடி அலைவதில், காத்திருப்பதில் விருப்பம் இல்லை.சுய தொழில் துவங்க விரும்பினார். அதன்படி, 'மா வேதாஸ்' என்ற பெயரில், சத்துணவு தயாரிக்கும் நிறுவனம் துவக்கினார். ௧௦ லட்சம் ரூபாய் முதலீட்டில், தொழிலை ஆரம்பித்தார். இப்போது ஆண்டுக்கு, 30 லட்சம் ரூபாய் வர்த்தகம் நடக்கிறது; 10 லட்சம் லாபம் கிடைக்கிறது. மக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும், குறிப்பாக குழந்தை பிரசவித்த பெண்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவுகளை, அதிநவீனமாக தயாரித்து, விற்பனை செய்கிறார். குழந்தை பிரசவித்த பெண்களுக்கான லேகியம், பூண்டு லேகியம், வெந்தய லட்டு உட்பட, பல விதமான ஊட்டச்சத்து உணவுகள் தயாரிக்கிறார். அவை அனைத்தும், அந்த காலத்து பாட்டிகள் கையாளும் வழிமுறையில் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2025 ஜூலையில் தொழிலை துவக்கினார். ஒரே ஆண்டில் மளமளவென வளர்ந்து, நாட்டின், 250க்கும் மேற்பட்ட புதிய தொழிலதிபர்களுடன் போட்டி போட்டு, 26ம் இடத்தை பிடித்து மத்திய அரசிடம் விருது பெற்றுள்ளார். தட்சிண கன்னட மாவட்டத்துக்கும், கர்நாடகாவுக்கும் இவர் பெருமை சேர்த்துள்ளார். டில்லி ஜனாதிபதி பவனில், ஜூலை 31ம் தேதி நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், இவருக்கு விருது வழங்கப்பட்டது. பாய்லர் மற்றும் ரைஸ் மில் தொழிலதிபரான ராமகிருஷ்ண ஆச்சாரின் மகன் பிரஜ்வல் ஆச்சாரின் மனைவியான அனுஷா, தன் சொந்த ஆர்வத்தில் இந்த தொழிலை துவக்கி, பெரும் வெற்றி பெற்றுள்ளார். தொழிலதிபராக வளர வேண்டும் என, ஆர்வம் காட்டும் இன்றைய இளம் பெண்களுக்கு, இவர் சிறந்த 'ரோல் மாடலாக' விளங்குகிறார்!