உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் / பலகாரம் விற்பனையில் மாதம் ரூ.1 லட்சம் ஈட்டும் இல்லத்தரசி

பலகாரம் விற்பனையில் மாதம் ரூ.1 லட்சம் ஈட்டும் இல்லத்தரசி

கர்நாடகா மாநிலம், ஹூப்பள்ளி மாவட்டத்தில் உள்ளது உன்கல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரூபா; இல்லத்தரசி. இவர் தனது குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவிட நினைத்தார். ஆனால், என்ன செய்வது என தெரியாமல் திகைத்தார். அப்போது, சமையல் செய்து விற்பனை செய்யலாம் என திட்டமிட்டார். சமையல் என்றால் இட்லி, தோசை அல்ல; பலரும் செய்வதற்கு சோம்பல் படும் பலகாரங்களை செய்ய முனைந்தார். முதலில் தன் வீட்டிலேயே முறுக்கு, அதிரசம், லட்டு, மிக்சர் போன்ற பலகாரங்களை செய்ய துவங்கினார். இதற்கு அவரது கணவர், உறவினர்கள் என, அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். அவர் சமைக்கும் பலகாரங்கள் வீட்டுமுறைப்படி செய்யப்படுவதால், அக்கம் பக்கத்தினர் மத்தியல் எளிதில் 'ரீச்' ஆகின. இதை மையப்படுத்தி, அவரும் வீட்டு முறையில் செய்யும் பலகாரங்கள் என விளம்பரம் செய்ய துவங்கினார். அப்போது, விழாக்கள், பண்டிகை நாட்களின் போது 'ஆர்டர்கள்' அதிகம் வர துவங்கியதால், உதவிக்காக தன் தோழிகளான மஞ்சுளா, அக்கமாதேவியையும் தொழிலில் சேர்த்து கொண்டார். பல வகை லட்டு காலத்தின் ஓட்டத்தில் ஆர்டர்கள் அதிகம் வர துவங்கின. இதனால், அவரும் பலகாரங்களை சமைக்க பெரிய அளவிலான பாத்திரங்களை வாங்கினார். புதிதாக பல வகைகளை அறிமுகப்படுத்தினார். பின்னர், உணவு விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் பெற்றார். லட்டுகளிலேயே ட்ரை புரூட் லட்டு, நட்ஸ் லட்டு என பல வகைகளை துவங்கினார். இது வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பலகாரங்களை பேக்கிங் செய்து சூப்பர் மார்க்கெட்டில் விற்று வருகிறார். தற்போது, வாரத்திற்கு 350 கிலோ அளவிலான பலகாரங்களை தயாரிக்கிறார். இது குறித்து ரூபா கூறுகையில், “கடந்த எட்டு ஆண்டுகளாக பலகாரங்கள் விற்பனை செய்து வருகிறேன். தற்போது, மாதம் 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறேன். பலரும் வருமானத்தை மட்டும் பார்க்கின்றனர். அதற்கு பின்னால் இருக்கும் உழைப்பை பார்ப்பதில்லை. என்னை போன்று வீட்டில் இருக்கும் பல பெண்களும் தொழில் முனைவோராக ஆக வேண்டும். எனது நிறுவனத்தை பெரிய அளவில் உருவாக்க ஆசைப்படுகிறேன்,'' என்றார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை