கபடி.. கபடி... கபடியில் கலக்கிய மம்தா
தமிழர்கள் வீர விளையாட்டுகளில் ஒன்று கபடி. தொடை தெரியும் மாதிரி டவுசர் அணிந்து கொண்டு கபடி, கபடி என்று பாடி கொண்டே எதிரணியினரை பிடிக்க போவது மாதிரி மிரட்டுவதும், எதிரணியிடம் பிடிபட்டால் ஜல்லிகட்டு மாடு போல துள்ளி குதித்து கோட்டை தாண்டுவதும் கபடிக்கே உரித்தான ஸ்டைல். கிராம பகுதிகளில் கபடி விளையாட்டை வாலிபர்கள் அதிகம் நேசிப்பர்.உடலில் ஏதாவது அடிபட்டு விடும் என்று பயந்து, பெரும்பாலான பெற்றோர் பெண் பிள்ளைகளை கபடி விளையாட அனுமதிப்பது இல்லை. ஆனால், பெண்களாலும் கபடி விளையாட்டில் சாதிக்க முடியும் என்று எடுத்துக்காட்டிய ஒருவரை பற்றி பார்க்கலாம்.கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பியின் கார்கலாவை சேர்ந்தவர் போஜா பூஜாரி. இவரது மனைவி கிட்டி பூஜாரி. இத்தம்பதியின் மகள் மம்தா பூஜாரி. இவருக்கு சிறுவயதில் இருந்தே கபடி மீது ஆசை அதிகம். ஆனால் பள்ளி நாட்களில் கைப்பந்து, ஷார்ட் புட் விளையாட்டுகளை அதிகம் விளையாடினார். கல்லுாரிக்கு சென்ற பின், கல்லுாரியின் கபடி அணியில் இணைந்தார். கடந்த 2004ம் ஆண்டு மங்களூரு பல்கலைக்கழக கபடி அணியில் இடம் பிடித்தார்.தமிழகத்தின் திருநெல்வேலியில் நடந்த போட்டியில் மங்களூரு அணி வெற்றி பெற்றது. மம்தா சிறப்பாக செயல்பட்டு தங்க பதக்கம் வென்றார், பின், மாநில அளவிலான கபடி போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, தொடர்ந்து தங்க பதக்கங்களை அள்ளினார். சிறப்பாக செயல்பட்டதால் மாநில கபடி அணியிலும் அங்கிருந்து இந்திய அணியிலும் இடம் கிடைத்தது.இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். தென் கொரியா, தாய்லாந்து, சீனா, ஈரான், ஓமன் நாடுகளில் நடந்த போட்டிகளிலும் ஜொலித்தார்.விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2014 ம் ஆண்டு அவருக்கு 'அர்ஜுனா விருது' கிடைத்தது. கர்நாடக அரசின் இரண்டாவது உயரிய விருதான 'ராஜ்யோத்சவ பிரசாஸ்தி' விருதையும் பெற்றார். தற்போது இந்திய ரயில்வேயின், தெற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் பணியாற்றி வருகிறார்.