உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / கோ - கோ விளையாட்டில் கலக்கும் மைசூரு குக்கிராமத்தின் 50 பேர்

கோ - கோ விளையாட்டில் கலக்கும் மைசூரு குக்கிராமத்தின் 50 பேர்

ஒரே கிராமத்தை சேர்ந்த பலர் ராணுவத்தில் சேவை செய்திருப்பதை கேள்வி பட்டிருப்போம். ஆனால், மைசூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், மாநிலம், தேசிய அளவில் கோ - கோ விளையாட்டில் ஈடுபட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா. ஆம்... மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா மற்றும் முருகூர் கிராமத்திற்கு இடையே அமைந்து உள்ளது குருபுர் கிராமம். மைசூரு நகரில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள இக்கிராமத்தில், 300 குடும்பத்தினர் 1,000 பேர் வசித்து வருகின்றனர். விவசாயம் இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாயத்தில் உள்ளனர். இத்தகைய கிராமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் மாநில அளவில், தேசிய அளவில் கோ கோ விளையாட்டில் பங்கேற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் குறிப்பாக, வீராங்கனையர் கோ - கோ விளையாட்டில் அதிகளவில் பங்கேற்றுள்ளனர். இக்கிராமத்தின் கோ - கோ விளையாட்டு வீரர்கள், தங்கள் கிராமத்துடன் நின்று விடாமல், கோதேகலா, மதரஹள்ளி, சீஹள்ளி, தொட்டவாடி, கன்னஹள்ளி என மற்ற கிராமங்களை சேர்ந்த வீரர் - வீராங்கனையருக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நடுவர்கள் நடப்பாண்டு புதுடில்லியில் நடந்த கோ - கோ உலக கோப்பை விளையாட்டில், பெண்கள் அணி சார்பில் பங்கேற்று, அணியின் வெற்றிக்கு காரணமான சைத்ரா, இக்கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன், 2016ல் கவுகாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டில், இக்கிராமத்தை சேர்ந்த வீணா முதன் முதலில் பங்கேற்றார். அதன்பின் மோனிகா, சைத்ரா ஆகியோர் இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். இக்கிராமம், வீரர்களை மட்டுமல்ல, நடுவர்களையும் அளித்து உள்ளது. சமீபத்தில் நடந்த போட்டியில், நடுவராக அமுல்யா ஈடுபட்டார். கடந்த, 2023ல் மைசூரு பல்கலைக்கழக பெண்கள் கோ - கோ அணியின் 15 வீரர்களில் 13 பேர் இக்கிராமத்தை சேர்ந்தவர்கள். 2024ல் 12 பேர் பங்கேற்றுள்ளனர். இக்கிராமத்தை சேர்ந்த கோ - கோ வீரர்கள், ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல், தினமும் 40 வீராங்கனையர், 30 வீரர்கள் என 70 பேர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், 40 வீராங்கனையரில் குறைந்தபட்சம் 30 பேர், தேசிய அளவில் நடந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் மஞ்சுநாத் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வோர், தினமும் காலை 6:00 முதல் 7:45 மணி வரையிலும்; மாலையில் வீட்டுக்கு வந்த பின் 3:30 முதல் 6:30 மணி வரையில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இத்தகைய சாதனைக்கு வித்திட்டவர் வித்யாதர்ஷினி பள்ளி கணித ஆசிரியர் மஞ்சுநாத். 2008ல் இப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்த போது, விளையாட்டில் மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாததை கவனித்தார். அவர்களுக்கு கோ - கோ விளையாட்டு குறித்து விளக்கி, அவரே பயிற்சியும் அளிக்க துவங்கினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை