உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / ஸ்நுாக்கர் விளையாட்டில் அசத்தும் மாற்றுத்திறனாளி அலோக் ஜெயின்

ஸ்நுாக்கர் விளையாட்டில் அசத்தும் மாற்றுத்திறனாளி அலோக் ஜெயின்

நல்ல உடல்வாகு கொண்டவர்களை விட, மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக கடுமையான முயற்சிகளை முன்வைப்பர். விளையாட்டுத் துறையில் தற்போது மாற்றுத்திறனாளிகள் நிறைய சாதிக்கின்றனர். இவர்களில் ஒருவர் மைசூரின் அலோக் ஜெயின், 37. குள்ளவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர், தன் உடல் ஊனத்தை ஒரு தடையாக கருதாமல், ஸ்நுாக்கர் விளையாட்டில் அசத்தி வருகிறார். கடந்த ஏப்ரலில் ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச ஸ்நுாக்கர் போட்டிகளில் பல விருதுகளை வென்று சாதனை படைத்தார். மாற்றுத்திறனாளி ஸ்நுாக்கர் விளையாட்டு வீரர்கள் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளார். இதுகுறித்து அலோக் ஜெயின் கூறியதாவது: என் உடல் ஊனத்தை, நான் எப்போதும் ஒரு தடையாக நினைத்தது இல்லை. முயற்சி செய்தால் முன்னேற முடியும் என்ன எண்ணத்தில், விளையாட்டின் மீது கவனம் செலுத்தினேன். சிறு வயதில் இருந்தே எனக்கு, ஸ்நுாக்கர் விளையாட்டு பிடிக்கும். இதனால் அந்த விளையாட்டை தேர்வு செய்தேன். அமெரிக்கா, ஜப்பான், சீனா, தாய்லாந்து உட்பட வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு உள்ளேன். மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாவது இடமும், தேசிய அளவில் நான்காவது இடமும் பிடித்துள்ளேன். ஓவியம் வரைவதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. எனது தந்தை ரமேஷ் குமார், தாய் சாதனா. ஸ்நுாக்கர் விளையாடுவதற்கு அவர்கள் எனக்கு நிறைய ஊக்கம் அளித்தனர். தந்தை தொழில் அதிபராக இருப்பதால், வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு சொந்த செலவில் செல்கிறேன். ஏழை குடும்பத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து அரசு உதவி செய்ய வேண்டும். நிறைய ஊக்கம் அளிக்க வேண்டும். சாத்தியமில்லை என்று நினைப்பது நமது மாயை. வெல்ல முடியும் என்று நினைப்பது தன்னம்பிக்கை. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !