உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  அதிகம் அறியப்படாத த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் ரகு

 அதிகம் அறியப்படாத த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் ரகு

- நமது நிருபர் -: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பற்றி, கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் அறிந்திருக்கும் வேளையில், அவர் கீழ் பணியாற்றும் உதவியாளர்கள் பற்றில அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இவர்களில் ஒருவர் இந்திய அணியின் 'த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட்' ரகு. ரகு பையா கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம், குமட்டாவை சேர்ந்தவர் ரகு; முழு பெயர் ராகவேந்திரா திவேதி. இந்திய கிரிக்கெட் வீரர்களால், 'ரகு பையா' என்று அன்பாக அழைக்கப்படுகிறார். 2011ம் ஆண்டில் இருந்து, இந்திய கிரிக்கெட் அணியின் த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்டாக உள்ளார். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ரகுவுக்கு அதீத ஆர்வம் இருந்தது. ஆனால் பள்ளி ஆசிரியரான அவரது தந்தை, மகனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கவில்லை. ஆனாலும் பள்ளி, உள்ளூர் அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். பந்தை துல்லியமாக த்ரோ செய்த இவரது திறமையை பார்த்த, இந்திய அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத், ரகுவை, கர்நாடக ரஞ்சி அணியின் த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்டாக கொண்டு வந்தார். இவரது திறமையால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீநாத், அவரை இந்திய அணியின் த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் ஆக்க, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்தார். வெளிநாடு கடந்த 2011 முதல் அணியில் இருக்கும் ரகு, இந்திய அணியின் முன்னாள் முன்னணி பேட்ஸ்மேன்கள் சச்சின், சேவாக் உள்ளிட்டோருக்கு, வலையில் பந்து வீசி உள்ளார். வெளிநாடுகளில் விளையாடும் போது, இந்திய வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்கொள்ள சிரமப்படுகின்றனர் என்ற பேச்சு இருந்தது. இதனை போக்கும் வகையில், வெளிநாட்டு மண்ணில் எப்படி விளையாட வேண்டும்; பவுன்ஸ் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய ரகு, மணிக்கு 140 முதல் 150 கி.மீ., வேகத்தில் பந்தை வீசி பயிற்சி அளித்தார். பேட்ஸ்மேன்கள் பலம், பலவீனத்தை கணித்து அவர்களின் கால் அசைவுகளுக்கு ஏற்ப, பந்தை வீசுவதில் ரகு கில்லாடி. பேட்ஸ்மேன்கள் எவ்வளவு நேரம் வலையில் பயிற்சி எடுக்க நினைக்கின்றனரோ, அதுவரை அவர்களுக்கு சளைக்காமல் ரகு பந்து வீசுகிறார். இவரை கடின உழைப்பாளி என்று, நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியே பாராட்டி உள்ளார். இந்திய அணியில் வீரராக விளையாட வேண்டும் என்ற ரகுவின் கனவு நிறைவேறாவிட்டாலும், இந்திய அணியில் தானும் ஒரு பாகமாக இருப்பதை நினைத்து பெருமை கொள்ளும் அவர், முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே சொந்த ஊருக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை