| ADDED : நவ 23, 2025 04:17 AM
தினமும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய கடமைகளில் பல் துலக்குவது முதலில் உள்ளது. பல் துலக்கி முகத்தை தண்ணீரில் கழுவுவதன் மூலம் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராம பகுதிகளில் சாம்பல், பல்பொடியை வைத்து தான் பல் துலக்கினர். தற்போதைய நவீன காலத்தில் கிராமத்தில் கூட 'டூத் பேஸ்ட்' வைத்து பல் துலக்குகின்றனர். தமிழகத்தில் கோபால் பல்பொடி அசைக்க முடியாத பிராண்டாக இருப்பதை போன்று, கர்நாடகாவில் நஞ்சன்கூடு பல்பொடியும் 112 ஆண்டு பாரம்பரியத்தை கொண்டது. இந்த பல்பொடியின் வரலாற்றை பார்க்கலாம். நஞ்சன்கூடு பல்பொடியை அறிமுகப்படுத்தியவர் மைசூரு நஞ்சன்கூடை சேர்ந்த ஆயுர்வேத நிபுணரான பி.வி.பண்டித். 100 ஆண்டுகளுக்கு முன்பு, தன் வீட்டில் அர்ச்சகர்கள் செய்த யாகத்தை கூர்ந்து கவனித்தார். நெருப்பில் எரிந்த அரிசி உமிகள் நீல நிற சாம்பல் கலவை போன்று மாறுவதை கவனித்தார். இந்த இயற்கையான சாம்பல், பல் சுகாதாரத்திற்கு உதவும் என்ற எண்ணம் அவருக்கு எழுந்தது. இதையடுத்து சாம்பலில் சில ஆயுர்வேத பொருட்களை கலந்து பல்பொடி தயாரித்தார். அதை தனக்கு தெரிந்தவர்களிடம் கொடுத்து, கருத்து கேட்டார். இந்த பல்பொடியை பயன்படுத்தியவர்கள், பல் துலக்கியதும் புத்துணர்ச்சியாக இருப்பதாக கூறினர். இப்படித் தான், நஞ்சன்கூடு பல்பொடி புகழ், கர்நாடகாவின் பட்டி தொட்டிகள் எங்கும் பரவியது. கர்நாடக திரை உலகின் ராஜ்குமார் உட்பட பழங்கால நடிகர்கள், நஞ்சன்கூடு பல்பொடியின் விளம்பர துாதர்களாக இருந்தனர். தற்போதும் கூட நஞ்சன்கூடு பல்பொடிக்கு தனி மவுசு உள்ளது. ஆண்டிற்கு ஒரு லட்சம் பல் பொடி பாக்கெட்டுகள் தயார் செய்கின்றனர். இதன்மூலம் 2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். ஒரு நுாற்றாண்டுக்கும் மேலாக தரம், பராம்பரியம், இயற்கை தன்மையை இந்த பல்பொடி தக்க வைத்துள்ளது. முன்பு அனைத்து மளிகை கடைகளிலும் பல்பொடி கிடைத்தது. தற்போது நஞ்சன்கூடிலும், தன்வந்திரி கடைகளில் மட்டும் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம். - நமது நிருபர் -