உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / மாறுவேடமிட்டு குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவும் கூலி

மாறுவேடமிட்டு குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு உதவும் கூலி

உடுப்பி மாவட்டம், கட்டபாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி கட்டபாடி. இவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். கூலித்தொழிலாளியாக இருந்தாலும், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவருக்கு மாறு வேடங்கள் போடுவது கைவந்த கலையாகும். 'ஏலியன், அசுரர்கள்' போன்று மாறுவேடம் போட்டு, பணம் சம்பாதித்தும் வருகிறார். இது போன்று, 14 ஆண்டுகளாக செய்து வருகிறார். மாறுவேடம் போட்டு சம்பாதிக்கும் பணத்தை, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ வசதி பெற முடியாமல் தவிக்கும் ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். இவரது முயற்சிக்கு அவரது நண்பர்களும் உதவி செய்து வருகின்றனர். அவர்களும் மாறுவேடம் போடுவது, ஒப்பனை செய்வது என உதவியாக உள்ளனர். பிரபலம் பள்ளிகளுக்கு மாறுவேடத்தில் சென்று அங்குள்ள குழந்தைகளை மகிழ்விப்பதையும் ரவி கட்டபாடி வழக்கமாக வைத்துள்ளார். இதன் மூலம், இதுவரை பல ஆயிரக்கணக்கில் கலெக் ஷன் செய்து உள்ளார். இந்த பணத்தை வைத்து, நோயால் அவதிப்பட்ட 130 ஏழை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை அளித்து உள்ளார். இதன் மூலம் உடுப்பி மாவட்டத்தில் மிக பெரிய பிரபலங்களில் ஒருவராக உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் மாறுவேடம் போட்டு சேமிக்கும் பணத்தை குழந்தைகளின் மருத்துவ செலவுக்காக தானமாக கொடுக்கிறேன். அதுமட்டுமின்றி, மாறுவேடம் போட்டு அனைத்து குழந்தைகளையும் மகிழ்விக்கிறேன். 'அவதார்', 'ஏலியன்', ஹாலிவுட் படத்தில் வரும் பல கதாபாத்திரங்களின் வேடத்தை போட்டு உள்ளேன். இதில், சில கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானதாக இருந்தது. பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்கும்போது, அவர்கள் முகத்தில் உருவாகும் சந்தோஷத்தை பார்த்து நானும் சந்தோஷப்படுவேன். சிறுவர், சிறுமியர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுவர். அப்போது, பெருமையாக இருக்கும். ஆனந்த கண்ணீர் இதைவிட முக்கியமானது என்னவென்றால், மாறுவேடமிட்டு சேர்த்த பணத்தை, நோயால் அவதிப்படும் குழந்தைகளின் பெற்றோரிடம் ஒப்படைக்கும்போது, அவர்கள் கண்ணிலிருந்து வரும் கண்ணீரை பார்க்கும் தருணம், ஈடு இணையில்லாதது. என்னிடம் பலரும் உதவி கேட்கின்றனர். பலரும் பொய்யான தகவல் அளித்து பணத்தை பெற முயல்கின்றனர். ஆனால், உண்மையாக உதவி கேட்பவர்களுக்கு மட்டுமே பணம் கொடுத்து உதவுவேன். இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை