உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / கடின உழைப்பு + வித்தியாசமான முயற்சி = லாபம்; இயற்கை முறையில் விவசாயம் செய்து அசத்தும் விவசாயி

கடின உழைப்பு + வித்தியாசமான முயற்சி = லாபம்; இயற்கை முறையில் விவசாயம் செய்து அசத்தும் விவசாயி

- நமது நிருபர் -: பாகல்கோட் மாவட்டம் மன்னிகட்டி கிராமத்தை சேர்ந்தவர் சலபன்னா திம்மாப்பூர், 41. இவர், 15 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். தன் நிலத்தில் காய்கறிகள் மட்டுமே பயிர் செய்து வருகிறார். வெண்டை, முருங்கை, தக்காளி, கத்திரி என பல விதமான வகைகளை பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கரில் ஒரு ரக காய்கறியும், மற்ற அரை ஏக்கரில் பல விதமான காய்கறிகளையும் ஒரே நேரத்தில் பயிரிட்டு வருகிறார். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்; செயற்கை உரங்களை பயன்படுத்தவில்லை. பூச்சி கொல்லிகளுக்கு கூட இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறார். லட்சத்தில் வருமானம் இதனால், இவரது தோட்டத்தில் விளையும் காய்கறிகளுக்கு சூப்பர் மார்க்கெட்டில் மவுசு அதிகமாக இருக்கிறது. கல்யாண, சுப நிகழ்ச்சிகளுக்கு பலரும் போட்டி போட்டு வாங்குகின்றனர். இவர், விவசாயம் செய்யும் முறையை பலரும் தெரிந்து கொள்ள ஆர்வப்படுகின்றனர். வேளாண் கல்லுாரி மாணவர்கள், விவசாயிகள் என பலரும் தோட்டத்தை சுற்றிப்பார்த்து, எப்படி விவசாயம் செய்கிறார் என்பதையும் கேட்டு தெரிந்து செல்கின்றனர். இவரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நஷ்டம் ஏற்படாமல் லாபம் ஈட்டுவதே. விவசாயத்தில் லாபம் ஈட்டுவது என்பது அரிதான விஷயம். ஆண்டுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

இது குறித்து, சலபன்னா திம்மாப்பூர் கூறியதாவது:

தற்போது, எனது வயலில் சர்க்கரைவள்ளி கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் பயிரிட்டு உள்ளேன். இது தவிர ஊடு பயிராக பூசணி, தட்டைப்பயறு போன்றவை பயிரிட்டு உள்ளேன். தினமும் காய்கறிகளை அறுவடை செய்வேன். இந்த காய்கறிகளை பாகல்கோட் மார்க்கெட்டுக்கு எடுத்து செல்கிறேன். ஒரு நாளைக்கு 5,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. நல்ல விதைகள் இதில், தொழிலாளர் கூலி, வண்டி செலவு என 2,000 ரூபாய் செலவு போக, லாபமாக 3,000 ரூபாய் கிடைக்கும். இது போன்று தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் செய்வதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். எனது சொந்த நிலத்தில் உள்ள போர்வெல் மூலமே தண்ணீரை பயன்படுத்துகிறேன். இந்த போர்வெல் தோண்டியதற்கு 1.50 லட்சம் ரூபாய் வரை செலவிட்டேன். இயற்கை முறையிலும் விவசாயம் செய்து லாபம் பார்க்கலாம் என்பதற்கு நானும் ஒரு சான்று. வருங்காலத்தில் பீன்ஸ் பயிரிட திட்டமிட்டு உள்ளேன். இதற்கான நல்ல விதைகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். காலையில் இருந்து மாலை வரை விவசாய நிலத்திலே இருப்பேன். கடும் உழைப்பிற்கான பயனை, அனுபவிக்கிறேன். சிறு விவசாயிகள் நெல், கரும்பு போன்று பயிரிடுவதை விட, காய்கறி பயிரிட்டு லாபம் பார்க்கலாம். இதுவே, நான் மற்ற விவசாயிகளுக்கு கூறும் அறிவுரை. இவ்வாறு அவர் கூறினார். கடின உழைப்புக்கும், வித்தியாசமான முயற்சிக்கும் எப்போதும் பலன் கிடைக்கும் என்பதற்கு சலபன்னா திம்மாப்பூரின் வாழ்க்கையே சான்றாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை