உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / ஆதரவற்றோரை ஆளாக்கும் மறுவாழ்வு மைய ம்

ஆதரவற்றோரை ஆளாக்கும் மறுவாழ்வு மைய ம்

காலம் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. காலச்சக்கரம் சுழல்கிறது. அன்று சாலைகளில் கையேந்தி பிச்சையெடுத்த நபர்கள், இன்று விவசாயிகளாக மாறி, தன்மானத்துடன் வாழ்கின்றனர்.தாவணகெரேவின் கூப்பிடு துாரத்தில் துர்ச்சகட்டா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சமூக நலத்துறை சார்ந்த ஆதரவற்றோர் மறுவாழ்வு மையம் உள்ளது. இந்த மையம் பல பிச்சைக்காரர்கள், ஆதரவற்றோரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிவைத்துள்ளது.அவர்கள் இன்று, யாரையும் சார்ந்திராமல் தன்மானத்துடன் வாழ்க்கை நடத்த இம்மையம் வழி வகுத்துள்ளது.

அடைக்கலம்

மறுவாழ்வு மையத்திற்கு தாங்களாகவே சிலர் வந்துள்ளனர். பஸ் நிலையம், ரயில் நிலையம், சதுக்கங்கள் என, பல இடங்களில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துவோரை, மறு வாழ்வு மைய ஊழியர்கள் அழைத்து வருகின்றனர். ஒன்றிரண்டு ஆண்டுகள் இலவச உணவு, தங்கும் இடம் அடைக்கலம் தருகின்றனர்.அவர்களுக்கு யோகா, கைவினை பொருட்கள் தயாரிப்பது, பினாயில், கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆசிட், பால் உற்பத்தி, விவசாயம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களிடம் உள்ள திறமையை வெளிப்படுத்துகின்றனர்.தினமும் இவர்கள் செய்யும் பணிக்காக, தினமும் 80 ரூபாய், அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இங்கிருந்து செல்லும்போது, சுய தொழில் துவங்குவதற்கு உதவியாக உள்ளது.கிட்டத்தட்ட 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆதரவற்றோர் மையத்தில், பால் உற்பத்தி, விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு வரும் ஆதரவற்றோர், விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.பசுக்களை பராமரித்து பால் உற்பத்தி செய்கின்றனர். போதிய பயிற்சி பெற்று விவசாயிகளாகவோ, சுய தொழில் செய்பவராகவோ மாறுகின்றனர். பலரிடம் கையேந்தி பிச்சை எடுத்தவர்களுக்கு, தற்போது 'புது வாழ்வு' கிடைத்துள்ளது.

இந்தியா

கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், ஆந்திரா, கேரளா, உத்தர பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களின் ஆதரவற்றோரும், மறுவாழ்வு மையத்தில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.சிலருக்கு விவசாயம் செய்து அனுபவம் இருப்பதால், விவசாய நிலத்தை பார்த்து குஷியோடு பணியாற்றுகின்றனர்.ஆதரவற்றோர் மைய நிர்வாகி காசிநாத் கூறியதாவது:சாலைகள், பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் பிச்சை எடுக்கும் நபர்களை, ஆதரவற்றோர் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்து வருகிறோம். இலவச உணவு, தங்கும் இடம் கொடுத்து தொழிற்பயிற்சி அளிக்கிறோம்.இவர்களின் பெயரில் வங்கிக் கணக்கு துவக்கி, அன்றாடம் 80 ரூபாய் செலுத்துகிறோம். அவர்கள் மனம் மாறி மறு வாழ்வு மையத்தில் இருந்து செல்லும்போது, இந்த தொகை அவர்கள் சுய தொழில் துவங்க உதவுகிறது.

சுறுசுறுப்பு

மையத்தில், 50 முதல் 60 வயது வரையிலான 120க்கும் மேற்பட்டோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவது ஆச்சரியமளிக்கிறது. 2024 - 25 பிப்ரவரியில் பிச்சை எடுத்த 1,500 பேர் மையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில், 200க்கும் மேற்பட்டோரின் முகவரியை கண்டுபிடித்து, வீட்டுக்கு அனுப்பினோம்.பத்து ஏக்கர் நிலத்தில், ௨ ஏக்கரில் காய்கறிகள் பயிரிடுகிறோம். தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, பச்சை மிளகாய், கீரை என, பலவிதமான காய்கறிகள் விளைகின்றன. இங்கு ஆதரவற்றோர் விவசாயம் செய்கின்றனர்.அது மட்டு மின்றி, பால் உற்பத்தி செய்கிறோம். இதற்காக 16 பசுக்கள் உள்ளன. இவற்றை ஆதரவற்றோரே பராமரிக்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் 15 லிட்டர் பால், இவர்களுக்காக பயன்படுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.மறுவாழ்வுஎங்களை போன்றவர்களுக்கு, சிறப்பான கல்வி அளிக்கின்றனர். மன அழுத்தத்தில் இருந்து விடுபட, பயிற்சி அளிக்கின்றனர். மிகவும் பராமரிக்கின்றனர். உணவு, தங்கும் இடம், மருத்துவ வசதி என, எதற்கும் குறைவில்லை. யாருக்காவது நோய் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, தேவையான சிகிச்சை அளிக்கின்றனர். பண்டிகை நாட்கள், சிறப்பு நாட்களில் பல விதமான உணவு வழங்கப்படுகிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட, இது அருமையான இடமாகும். பலருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.சதீஷ் பாட்டீல், அடைக்கலம் பெற்றவர் - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை