சிலருக்கு கண்கள் அடிக்கடி சிவந்து காணப்படும். இது அவர்களுக்கு பெரிய பிரச்னையாக இல்லாதபோதும் கூட சிவந்த கண்களுடன் அவர்கள் தங்கள் முகத்தை கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது மனதில் சலசலப்பை ஏற்படுத்தும். கண்கள் எப்போதும் மிதமான சிவப்பு நிறத்தோடு காணப்படுவது தங்களுக்கு ஏதாவது உடல் பாதிப்பை உண்டாக்குமா என நினைப்பர். கண்களில் கோடிக்கணக்கான செல்களும் மெல்லிய நரம்புகளும் உள்ளன. கண்களின் வெள்ளைப் படலம் சிவக்க பலவித காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன எனப் பார்ப்போம். ஸ்மார்ட்போன், கணினி, லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட கேட்ஜெட்டுகளைத் தொடர்ந்து பலமணி நேரம் பார்த்துவந்தால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு கண்கள் சிவக்கும்.
காய்ச்சலின்போது உடல் உஷ்ணம் அதிகரிக்கும். அப்போது கண்கள் சிவக்க வாய்ப்புள்ளது. சரியான தூக்கமின்மை காரணமாக கண்கள் சிவக்கும். உப்புத் தண்ணீரில் குளித்தால் சிலருக்கு கண் ஓவ்வாமை ஏற்படும். இதனால் கண்கள் சிவக்கலாம். நீண்டகாலம் சுத்தம் செய்யப்படாத ஏசியில் பணியாற்றுபவர்களுக்கு கண் பாதிப்பு, எரிச்சல் உண்டாகலாம். ஒரு நாளில் அதிக நேரம் காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்களுக்கு கண் ஒவ்வாமையால் கண் சிவத்தல் ஏற்படலாம். அதீத மதுப்பழக்கம் காரணமாக கண் நரம்புகளுக்கு அழுத்தம் கூடி கண் சிவத்தல் ஏற்படலாம். ஹெல்மெட் அணியாமல் நீண்ட தூரம் பைக் பயணம் செய்பவர்களுக்கு கண்களில் தூசு படிந்து அரிப்பு, கண் சிவத்தல் ஏற்படலாம். கண்களில் போதுமான கண்ணீர் சுரக்காததால் கண்கள் வறண்டு கண் எரிச்சல், கண் சிவத்தல் ஏற்படலாம்.
சிறிய பிரச்னை உள்ளவர்கள் கண் மருத்துவரை அணுக வேண்டியதில்லை. ஆனால் கண் சிவத்தலுடன் அதீத கண் கூச்சம், வீக்கம், பார்வை மங்கலாவது, கண் அரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி கண்களைப் பரிசோதிப்பது நல்லது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இவர்கள் கண் சிவத்தல் ஏற்பட்டால் அவசியம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், முந்திரி, பழங்கள், கோதுமை உள்ளிட்ட சத்தான உணவுகளை உட்கொண்டு நேரத்துக்கு உறங்கி, உடற்பயிற்சி செய்துவந்தால் கண் பிரச்னைகளை இயற்கை வழியில் விரட்ட முடியும்.