உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும் பூங்கா

சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும் பூங்கா

மன்னர்கள் முதல் முக்கிய மனிதர்களையும், முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களையும் பாதுகாக்கவே, அந்த காலத்தில் கோட்டைகள் கட்டப்பட்டன. எதிரிகள் எளிதில் வந்துவிட கூடாது என்பதற்காக, மன்னர்களின் கோட்டையை சுற்றி பிரமாண்ட மதிற் சுவர் கட்டப்பட்டு இருக்கும். அந்த சுவரை கடந்து வருவதே எதிரிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும்.கர்நாடகாவில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோட்டைகள் இன்னும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. தற்போது அந்த கோட்டைகள் சுற்றுலா தலங்களாக மாறி உள்ளன. மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள், போருக்கு பயன்படுத்திய பீரங்கி குண்டுகளும் இன்னும் சில கோட்டைகளில் உள்ளது. அதை மக்கள் ஆர்வமாக பார்க்கின்றனர்.பெங்களூரிலும் திப்பு சுல்தான், பேகூர், சிக்கஜாலா, சவனதுர்கா, தேவனஹள்ளி, கெம்பேகவுடா உள்ளிட்ட சில கோட்டைகள் உள்ளன. இந்த கோட்டைகளை பற்றி மக்கள் அதிகம் அறிந்து இருப்பர். ஆனால் மக்கள் அதிகம் செல்லாத ஒரு கோட்டையும் உள்ளது. அது எங்கு உள்ளது, எப்படி செல்வது என்று பார்ப்போம்.பெங்களூரின் மல்லசந்திரா என்ற இடத்தில் மலை மீது அமைந்து உள்ளது மல்லசந்திரா கோட்டை. வட்டவடிவில் இருந்து கோட்டையின் உச்சிக்கு சென்று பார்த்தால், சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி சென்னம்மா குதிரை மீது அமர்ந்து கையில் வாளை பிடித்து இருப்பது போன்று பிரமாண்ட சிலை உள்ளது. இந்த சிலை அங்கு வரும் சுற்றுலா பயணியரை வெகுவாக கவரும் வகையில் உள்ளது. சிலை முன்பு நின்று உற்சாகமாக செல்பி எடுத்து கொள்கின்றனர். கோட்டையை சுற்றி பார்க்கும் போது கால் வலித்தால், சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வகையில் கல் துாண்கள் போடப்பட்டு உள்ளன.

மெட்ரோ ரயில்

கோட்டை மீது நின்று மல்லசந்திரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பார்க்க பிரமிப்பாக இருக்கும். கோட்டை உச்சி பகுதியில் குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடவும் ஏற்ற இடம் உள்ளது.பூங்கா தினமும் காலை 6:00 மணி முதல் 9:30 மணி வரையும்; மாலை 4:00 முதல் 6:30 மணி வரையும் திறந்திருக்கும். மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து மல்லசந்திரா 14 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது. சிக்கபானவரா செல்லும் பி.எம்.டி.சி., பஸ்களில் செல்லலாம். மெட்ரோ ரயிலில் சென்றால் தாசரஹள்ளியில் இறங்கி அங்கிருந்து 1 கி.மீ., துாரத்தில் உள்ள கோட்டையை அடையலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை