உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / குட்டீஸ்களுக்கு பிடித்தமான பன்னரகட்டா

குட்டீஸ்களுக்கு பிடித்தமான பன்னரகட்டா

பெங்களூரில் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும், பன்னரகட்டா தேசிய உயிரியல் பூங்கா, மக்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். குறிப்பாக சிறார்களுக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலா தலமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.பெங்களூரு நகர் அதிவேகமாக வளரும் நகராகும். உலகின் பார்வை பெங்களூரு மீது பதிந்துள்ளது. உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் நகருக்கு வரும் சுற்றுலா பயணியர் இங்குள்ள சுற்றுலா தலங்களை விரும்பி பார்க்கின்றனர்.கப்பன் பூங்கா, லால்பாக், விஸ்வேஸ்வரப்பா அருங்காட்சியகம், புராதன கோவில்கள், பன்னரகட்டா தேசிய உயிரியல் பூங்கா உட்பட, பல்வேறு இடங்கள் சுற்றுலா பயணியரை ஈர்க்கின்றன.குறிப்பாக ஆனேக்கல்லின் பன்னரகட்டா தேசிய உயிரியல் பூங்கா, சிறார்களுக்கு மிகவும் பிடித்தமானது.பன்னரகட்டாவில் யானைகள், சிறுத்தை, மான், கரடி, சிங்கம், புலி, முள்ளம்பன்றி, பனிக்கரடி, உட்பட, பல்வேறு வன விலங்குகள், பறவைகள் உள்ளன. சபாரியும் செல்லாம். இதே காரணத்தால் பலரும் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பன்னரகட்டா செல்கின்றனர். 260.5 கி.மீ., பரப்பளவு கொண்ட இப்பூங்கா, 1970ல் அமைக்கப்பட்டது.கண்களுக்கு விருந்தளிக்கும், இயற்கை காட்சிகள் நிறைந்த அடர்த்தியான வனப்பகுதி கொண்டது. இயற்கை காட்சிகள், சுதந்திரமாக நடமாடும் வன விலங்குகள், இன்னிசை பாடும் பறவைகளின் ரீங்காரத்தை ரசித்தபடி ஜீப்பில் செல்லலாம்.கற்பாறைகள், ஏரிகள், பட்டாம்பூச்சி பூங்காவும் உள்ளது. பெங்களூருக்கு வரும் உள்நாடு, வெளிநாடுகளின் சுற்றுலா பயணியர், பன்னரகட்டா தேசிய உயிரியல் பூங்காவை பார்க்க மறப்பதில்லை.அது மட்டுமின்றி வனப்பகுதியில் சம்பங்கி ராமர் கோவிலும் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவி குடிகொண்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை இங்கு திருவிழா நடக்கும். பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்வர். ஆனால் தற்போது வன விலங்குகள் பீதியால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.மனதுக்கு அமைதி, உடலுக்கு ஓய்வு வேண்டுவோருக்கு பன்னரகட்டா உயிரியல் பூங்கா தகுதியான இடமாகும். சில மணி நேரம் இங்கு பொழுதுபோக்கினால், புது விதமான அனுபவம் கிடைக்கும்.

எப்படி செல்வது?

பெங்களூரின் மெஜஸ்டிக், மல்லேஸ்வரம் உட்பட, பல பகுதிகளில் இருந்தும் பன்னரகட்டாவுக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. தனியார் பஸ், வாடகை கார், ஆட்டோக்களிலும் செல்லலாம். காலை 9:30 மணி முதல், மாலை 5:00 மணி வரை, பூங்காவை பார்க்க அனுமதி உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை.

கட்டணம்?

பட்டாம்பூச்சி பூங்காவை காண, பெரியவர்களுக்கு 50 ரூபாயும், மூத்த குடிமக்கள், சிறார்களுக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பூங்கா நுழை வாசலில் டிக்கெட் பெறலாம். ஆன்லைன் வழியாகவும் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளலாம்.வாகனங்களில் சபாரி செல்ல பெரியவர்களுக்கு 300 ரூபாய், மூத்த குடிமக்கள் 200 ரூபாய், சிறார்களுக்கு 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் கூடுதலாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.அருகில் உள்ள சுற்றுலா இடங்கள்: சாரக்கி ஏரி, பேகூர் கோட்டை, புட்டேனஹள்ளி ஏரி, ஹுலிமாவு ஏரி. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி