உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / இயற்கையை விரும்புவோருக்கு இதமளிக்கும் ஜோகிமட்டி வனப்பகுதி

இயற்கையை விரும்புவோருக்கு இதமளிக்கும் ஜோகிமட்டி வனப்பகுதி

பரபரப்பான நகர வாழ்க்கையை விட்டு, குடும்பத்தினருடன் ஒரு நாள் பொழுதை செலவிட வேண்டும் என்று நினைப்போருக்காக, கர்நாடகாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் ஒன்று ஜோகிமட்டி வனப்பகுதி. கோட்டைகளின் நகரம் என்று பெயர் பெற்ற, சித்ரதுர்காவின் ஹொலல்கெரே - ஹரியூர் தாலுகாக்கள் இடையே, 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுவது ஜோகிமட்டி வனப்பகுதி. மலையேற்றம், இயற்கையை விரும்புவோர் செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. வனப்பகுதிக்குள் பச்சை, பசலேன காட்சி அளிக்கும் மரங்களின் நடுவில் செல்லும் போது புதிய அனுபவம் கிடைக்கும். கடந்த 2015ம் ஆண்டில் ஜோகிமட்டி வனப்பகுதியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இங்கு பன்முக தன்மை கொண்ட வனவிலங்குகள் உள்ளன. கருப்பு சிறுத்தை, காட்டெருமை, சிறுத்தை, இந்திய நரிகள், ஓநாய்கள், மலபார் ராட்சத அனில்கள், சாம்பல் காட்டு கோழி, மஞ்சள் தொண்டை புல்புல், இந்திய ரோலர்கள், அழிந்து வரும் அரிய வகை உயிரினங்களை இங்கு கண்டு ரசிக்கும் வாய்ப்பு உள்ளது. வ னப்பகுதியின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், மலையேற்றம். வனப்பகுதிக்குள் உள்ள ஜோகிமட்டி மலை கடல் மட்டத்தில் இருந்து 3,985 அடி உயரத்தில் உள்ளது. மலையின் உச்சிக்கு சென்று அங்கு உள்ள பாறைகள் மீது அமர்ந்து, இயற்கையை கண்டு ரசிப்பது மனதிற்கு தித்திப்பாக இருக்கும். மலையேற்றத்தின் போது சிறிய நீர்வீழ்ச்சிகள், சிவலிங்கம், வீரபத்ரா, பசவண்ணாவின் சிலைகளையும் பார்க்கலாம். தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வனப்பகுதி திறந்து இருக்கும். நுழைவு கட்டணம் உண்டு. பெங்களூரில் இருந்து 207 கி.மீ., துாரத்தில் ஜோகிமட்டி வனப்பகுதி உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து சித்ரதுர்காவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் சென்று அங்கிருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ள ஜோகிமட்டிக்கு செல்லலாம். சுற்றுலா பயணியர் சொந்த வாகனத்தில் சென்றால், வாக னங்களை பார்க்கிங் செய்யும் வசதியும் உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை