உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா /  சுற்றுலா பயணியரை ஈர்க்கும் தொட்டகெரே ஏரிப்பகுதியும்,

 சுற்றுலா பயணியரை ஈர்க்கும் தொட்டகெரே ஏரிப்பகுதியும்,

அரண்மனை நகரான மைசூரில், சுற்றுலா தலங்களுக்கு பஞ்சம் இல்லை. அரண்மனைகள், கோட்டைகள், மிருகக்காட்சி சாலை, அணைகள் என, பலவிதமான சுற்றுலா தலங்கள் உள்ளன. ஹதினாறு கிராமத்தில் உள்ள தொட்டகெரே ஏரிப்பகுதியும், பிரபலமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள ஹதினாறு கிராமத்தில், தொட்டகெரே என்ற பெயரில், விசாலமான ஏரி உள்ளது. இந்த ஏரி சுற்றுப்புற கிராமத்தினருக்கு மட்டுமின்றி, பறவை ஆர்வலர்களுக்கும் மிகவும் பிடித்தமானது. ஆண்டு தோறும் இங்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள், அடைக்கலம் தேடி வருகின்றன. தொட்டகெரே ஏரியை, பல நுாறு ஆண்டுகளுக்கு முன், யது வம்சத்து மன்னர் அமைத்ததாக, வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர். விலங்குகள், பறவைகள் மீது அதிக பற்று கொண்ட மன்னர், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளித்தவர். மக்களின் குடிநீருக்கு உதவும் நோக்கில், ஏரியை உருவாக்கினார். இன்றைக்கும் இந்த ஏரி, வெளிநாட்டு பறவைகளுக்கு பாதுகாப்பாக உள்ளது. ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் இருந்து, பறவைகள் பறந்து இங்கு வருகின்றன. மூன்று மாதங்கள் இங்கு தங்கி, இனவிருத்தி செய்த பின், சொந்த இடத்துக்கு திரும்புகின்றன. ஏரியில் கூட்டம், கூட்டமாக பறக்கும் பறவைகளை காண்பது, மனதுக்கு இதம் அளிக்கிறது. எனவே, சுற்றுப்புற நகரங்களில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர். கிராமத்து இளைஞர்கள் சேர்ந்து, 'பறவை திருவிழா'வையும் நடத்துகின்றனர். ஏரியில் எடுக்கப்பட்ட போட்டோக்களை, கண்காட்சிக்கும் வைக்கின்றனர். பறவைகளின் புகலிடமாக மாறிய ஏரியை சீரமைக்க, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மஹாதேவப்பா ஆர்வம் காட்டினார். மண் அள்ளப்பட்டது. ஐந்து ஏக்கர் பரப்பளவில், ஏரிக்குள் பறவைகள் தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் நிற்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இங்கு அடைக்கலம் பெறும் பல ஆயி ரக்கணக்கான பறவைகள் ஹதினாறு, பொக்கள்ளி, ஹுலிமாவு, ஹதினாறு மூளே, மூடள்ளி, சுத்துார் உட்பட, சுற்றுப்புற கிராமங்களின் வயல்களில், விவசாயிகள் பயிரிட்ட தானியங்களை சாப்பிட்டு நிம்மதியாக வாழ்கின்றன. ஏரியில் மிதக்கும், பறக்கும் பறவைகள், இப்பகுதியை சொர்க்கமாக மாற்றியுள்ளன. இந்த அழகை ரசிக்க வார இறுதியில் அதிகமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். ஏ ரியை பார்வையிட நேரம் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் பறவைகளை ரசிக்கலாம். பசுமையான தோட்டங்கள், வயல்களு க்கு நடுவே ஏரி உள்ளது. எனவே, பகல் நேரத்தில் இங்கு வந்து மாலை வரை பறவைகளை ரசித்த பின், மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி கொண்டு திரும்பலாம்.

தனியார் பஸ் வசதி உண்டு

மைசூரில் இருந்து, 23 கி.மீ., தொலைவில், நஞ்சன்கூடு உள்ளது. அங்கிருந்து, 20 கி.மீ., தொலைவில் தொட்டகெரே ஏரிக்கு செல்லலாம். அனைத்து நகரங்களில் இருந்தும், நஞ்சன்கூடுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. நஞ்சன்கூடில் இறங்கி, வாடகை வாகனத்தில் தொட்டகெரே ஏரிக்கு செல்லலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி