மனதை மயக்கும் மாண்டியாவின் ஹேமகிரி நீர்வீழ்ச்சி
ஹேமாவதி நதியின் குறுக்கே விவசாயத்துக்காக கட்டப்பட்ட தடுப்பணையால் உருவான செயற்கை நீர்வீழ்ச்சி, சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக மாறியுள்ளது. மாண்டியா மாவட்டம், கிருஷ்ணராஜ்பேட்டின் பண்டிஹொளே கிராமத்தில் ஹேமாவதி நதி ஓடுகிறது. சுற்றுப்புற கிராம மக்களின் விவசாயத்துக்காக, 1880ல் ஹேமாவதி நதியின் குறுக்கே 415 மீட்டர் நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டது. ஹேமகிரி மலையை சுற்றி, ஹேமாவதி நதி ஓடுகிறது. இம்மலையின் மீது வெங்கடரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. வைகுண்டத்தில் இருந்து இம்மலைக்கு விஷ்ணு வந்து சென்றதாக நம்பப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரியில் ரதோத்சவம், தெப்போத்சவம் நடந்து வருகின்றன. இந்நேரத்தில், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், 15 நாட்களுக்கு முன்னதாகவே இக்கோவிலுக்கு பக்தர்கள் வந்துவிடுவர். 1 கி.மீ., சுற்றளவு கொண்ட நிலத்தில் கால்நடை திருவிழா நடக்கும். கால்நடைகளை வாங்கவில்லை என்றாலும், இந்த கண்காட்சியை பார்க்கவே பலரும் இங்கு வருகின்றனர். இங்கு கட்டப்பட்ட தடுப்பணையில் வழிந்தோடும் நீர், நீர்வீழ்ச்சி போன்று இருக்கும். இதில் குளிப்பதற்காக, சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர். வார விடுமுறை நாளை குடும்பத்தினர், நண்பர்களுடன் கொண்டாட ஏற்ற இடம். இருசக்கர வாகனம், கார்களில் பயணம் செய்யும்போது, குதுாகலமாக இருக்கும்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்தில் இறங்கலாம். அங்கிருந்து பஸ், டாக்சி மூலம், கிருஷ்ணராஜ்பேட் பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 11 கி.மீ., தொலைவில் உள்ள ஹேமகிரிக்கு செல்லலாம். ரயிலில் செல்வோர், மண்டகெரே ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம். பஸ்சில் செல்வோர், கிருஷ்ணராஜ்பேட் பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 11 கி.மீ., தொலைவில் உள்ள ஹேமகிரிக்கு செல்லலாம். - நமது நிருபர் -