ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காங்கிரஸ் எம்பிக்கள்! Rahul | Priyanka | Congress MP
ராகுலின் தங்கை பிரியங்கா, கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று, முதன் முறையாக எம்.பி.யாகி உள்ளார். அம்மா, மகன், மகள் என குடும்பமே இப்போது எம்.பி.யாக உள்ளனர். பிரியங்காவுக்கு சக காங்கிரஸ் எம்.பி.க்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என, பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. ராகுல் எப்போது சபைக்குள் வந்தாலும், உடனே காங்கிரஸ் எம்.பி.க்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து நின்று வரவேற்கின்றனர். சிலர் பாதி உட்கார்ந்த நிலையிலும், பாதி எழுந்திருக்கும் நிலையிலும் மரியாதை தருகிற மாதிரி ஒரு பாவ்லா காட்டுகின்றனர். அத்துடன் ராகுல் பார்லிமென்டுக்கு வரும் போதும், வெளியே போகும் போதும் எம்.பி.க்களான வேணுகோபால், சசி தரூர், மாணிக்கம் தாக்கூர் ஒட்டிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் பிரியங்காவை எந்த எம்.பி.யும் கண்டுகொள்வதில்லை. இதை பா.ஜ.வினர் கவனித்து வருகின்றனர். ராகுல் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அதனால் தான் இந்த மரியாதை என்கின்றனர் காங்கிரசார்.