ரிப்பேருக்கு போன காரை ஏமாற்றி விற்றவரை தேடுகிறது போலீஸ் | OLX | Car Sale | Vyasarpadi
சென்னை வியாசர்பாடி பி.பி ரோடு பகுதியில் வசிப்பவர் ரபேல். ஆட்டோ ஒர்க்ஸ் கேரேஜ் நடத்தி வருகிறார். சென்ற மாதம் 24ம் தேதி வியாசர்பாடியை சேர்ந்த ராணி தனது காரை ரிப்பேர் செய்ய ரபேல் ஒர்க் ஷாப்பில் விட்டுள்ளார். காரை நிறுத்த இடம் இல்லாமல் அருகில் உள்ள சாலையில் ரபேல் நிறுத்தி உள்ளார். சென்ற ஒன்றாம் தேதி மதியம் அந்த கார் காணாமல் போய் இருப்பதைக் கண்டு ரபேல் ஷாக் ஆனார். கார் ஓனர் ராணி வியாசர்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது காரை ரெக்கவரி வாகனம் மூலம் எடுத்து சென்றது தெரிந்தது. அந்த நம்பரை டிராக் செய்து விசாரித்ததில் அவர் கடலூர் வேம்பூரை சேர்ந்த அரவிந்த் என்பது தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கொளத்தூர் பகுதியில் கார் வாங்கி விற்கும் அரவிந்த் அந்த காரை எடுத்து செல்ல கூறியது தெரிந்தது. அரவிந்திடம் விசாரித்த போது தான் முழு உண்மை தெரிய வந்தது. பிரதீப் ராஜா என்ற நபர் அந்த காரை ஸ்கிராப் கார் எனக்கூறி ஓஎல்எக்ஸ்ல் பதிவு செய்துள்ளார். அரவிந்த் 29 பிரதீப் ராஜாவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். கார் ஸ்கிராப் கார் என்பதால் வண்டிக்கு ஆர்சி புக் சாவி எதுவும் இல்லை எனக் கூறி ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கு பிரதீப் ராஜா விற்றுள்ளார். காரை ரெக்கவரி செய்த அரவிந்தை கைது செய்தனர். அரவிந்த் மற்றும் காரை எடுத்துச் செல்ல உதவிய நந்தனிடம் விசாரணை நடக்கிறது. முக்கிய குற்றவாளியான பிரதீப் ராஜாவை வியாசர்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.