இந்த முறை அரசு ஊழியர்... நெல்லையை உலுக்கிய சம்பவம் veppilankulam | Panagudi case | Nellai crime news
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் சங்கர் வயது 52. மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இவர் பணகுடி அருகே உள்ள வேப்பிலாங்குளம் பஞ்சாயத்து செயலராக வேலை பார்த்து வந்தார். இன்று வழக்கம் போல் தனது பைக்கில் வேலைக்கு புறப்பட்டார். பணக்குடி அருகே உள்ள பெருங்குடி பகுதியில் வந்த போது, அரிவாளுடன் வந்த ஒரு கும்பல் அவரை வழி மறித்தது. அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற சங்கர் பைக்கில் இருந்து தடுமாறி விழுந்தார். பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னாலேயே விரட்டி சென்ற கும்பல், ஓட ஓட அவரை வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சங்கர், சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது. அந்த வழியாக சென்ற முதியவர் ஒருவர், கொலையாளிகளில் ஒருவரை கண்டார். அரிவாளுடன் அவன் ஓடுவதை பார்த்து சந்தேகம் அடைந்த முதியவர் சம்பவ இடத்தில் சங்கள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பணகுடி போலீசார், சங்கர் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார் என்று உடனடியாக தெரியவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். கொல்லப்பட்ட சங்கர் பஞ்சாயத்து செயலர் என்பதால், பின்னணியில் மாஃபியா கும்பல் சதி இருக்கிறதா? அல்லது சங்கருக்கு வேறு நபர்களுடன் பகை இருந்ததா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் அரசு ஊழியரை ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பணகுடி பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையில் பழிக்குப்பழி கொலைகள், சாதிய கொலைகள் என ஜனவரி மாதத்தில் மட்டும் 7 கொலைகள் நடந்தன. அந்த பதற்றமே தணியவில்லை. அதற்குள் இன்னொரு கொலை நடந்திருக்கிறது. நெல்லை மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை கேள்வி குறியாக்கி இருக்கிறது இந்த சம்பவம்.