ஜனநாயகன்!
'தளபதி' என்பதன் பொருள் யாது?இதன் பொருள் 'நிழல்கள்' ரவியின் குரலில் க்ளைமாக்ஸில் விளக்கப்படும் வரை, விஜய்... விஜய்... விஜய்; அவர் ஆடுகிறார்... பாடுகிறார்... சிரிக்கிறார்... அரசியல் பேசுகிறார்; அரங்கில் இடைவிடாது 'விசில்' கச்சேரி! 'இந்த படத்திற்கு அனிருத் இசை இல்லை என்றால் இப்படம் என்னவாகி இருக்கும்; 'டிரெய்லர்' வெளியாகாது இருந் தி ருந்தால், நெருங்கிப் பழகிய நண்பனை பார்க்கையில் எழும் இந்த ஆர்ப்பரிப்பு சாத்தியமா' எனும் கேள்விகள், அவ்வப்போது... குறிப்பாக இடைவேளைக்கு பின் அடிக்கடி எழுகின்றன! தமிழக அமைச்சர்கள் அருண்ராஜ், தமிழன் பார்த்திபன் மவுனமாய் வந்துபோகும் காட்சிகள் நமக்கு என்னவோ சொல்ல வருகின்றன; ஆனால், அது சரியாக புரியவில்லை. அமைச்சர் ஆனந்த் வரும் காட்சியில் இப்படியான சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காக அவரை 'மதநல்லிணக்கம்' பேச வைத்திருக்கிறார் இயக்குனர். அரசியல்வாதியால் டிரவுசரோடு நிறுத்தப்பட்டவன், உலகை நடுங்க வைக்கும் பயங்கரவாதி ஆகிறான்; அவனிடம் இருந்து இந்தியாவை காத்து, தமிழக டி.ஜி.பி., அலுவலகத்தில் விஜய் தேசியக்கொடி ஏற்றும் 'மாறுபட்ட' கதை! உச்சி மண்டையை சூடேற்றும் இக்கதையில், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் ரத்தம் சூடேறும் வகையில் பல சண்டை காட்சிகள்; குறிப்பாக, பாட்ஷா படத்தில் தங்கையின் ரத்தம் பார்த்ததும் ரஜினிக்கு கோபம் வருவது போல், இதில் மகள் போன்றவளின் ரத்தம் பார்த்ததும் விஜய்க்கு பெரும் கோபம் வருகிறது. மகள் பாதிக்கப்படும் சம்பவ இடத்தில் உள்ள துருவேறிய குழாய்களை கொண்டு 'இன்ஸ்டன்ட்' ஆயுதம் தயாரித்து சிக்கியவர்களை சிதைக்கிறார்; 'ப்ப்பா... வேற லெவல்' என்று திரைக்கு நேரே விரல்கள் குவித்து விஜயை அள்ளிக் கொஞ்சுகிறான் தமிழன்; 'ஏன்... எதற்கு' என்று பிடிபடாத இப்படியான சண்டை காட்சிகள் திரைக்கதை முழுக்க இருப்பதால் கொஞ்சி தீர்க்கப்படுகிறார் விஜய். 'தேர்தலுக்கு முன் 'ரிலீஸ்' ஆகியிருக்க வேண்டிய படம்' என்பதால், 'தப்பா ஓட்டு போட்ட மக்கள் தான்டா குற்றவாளி' எனும் பிரகாஷ்ராஜின் வசனத்திற்கு மட்டும் அரங்கில் பேரமைதி! மற்றபடி... 100 சதவீத 'விஜய் மேஜிக்' இந்த ஜனநாயகன் . ஆக...'ரியல்' ஜனநாயகன் சி.ஜோசப் விஜயின் அதிரடியோடு ஒப்பிட்டால், இந்த 'ரீல்' நாயகனுக்கு இரண்டாவது இடம்தான்