மிஸ்டர் மூளைக்காரன் c/o தமிழ்நாடு
'நம்பர் ஒன்' முதல்வர் ஆளும் தமிழக தலைநகரில், வேலையற்ற பட்டதாரிகள் இருவர்....'பாம்பை கையில் பிடிக்கும் குழந்தைக்கு பயம் என்னவென்று சொல்லத் தெரியாது; அந்த குழந்தை போல நான்'னு மாநாட்டு மேடையில த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய் தன்னை அறிமுகப்படுத்தினதும் கைதட்டினேன் மச்சி!''ஆமா... பார்த்தேன்!''அடுத்த வசனமா, 'பாம்பெனும் அரசியலை கையில் பிடித்து விளையாடப் போகும் தலைவர் நான்'னு சொன்னதும் விசிலடிச்சேன்!''ஆமா... அதையும் பார்த்தேன்; அதுக்கென்ன இப்போ?''இல்ல... பாம்பை கையில பிடிக்கிற குழந்தையோட அறியாமைக்கு எதுக்காக கைதட்டினோம்னு இப்போ தோணுது; அதான்!''என்ன திடீர்னு இப்படி ஒரு ஞானோதயம்; 'தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது'ன்னு காட்டமா பதிவு போட்டாரே... அதை நினைச்சுப் பார்த்தியா; இல்ல... வெள்ளத்துல பாதிக்கப்பட்ட மக்களை தன் இடத்துக்கு வரவழைச்சு உதவி செஞ்சாரே... அதை நினைச்சியா?''ரெண்டும் இல்ல மச்சி... புதுக்கோட்டை வேங்கைவயல் அநீதிக்கு அரசு இன்னும் நீதி வழங்கலைன்னு குமுறிட்டு கோவா திருமணத்துக்குப் போனதையும், இப்போ, 'தமிழக பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் நிற்பேன்'னு கைப்பட எழுதி நீட்டுனதையும் நினைச்சேன்!''ஏன்... இரண்டுலேயும் என்ன பிரச்னை?''மச்சி... 'நீதி வழங்க ஏன் தாமதம்'னு குரல் எழுப்புற பொறுப்பான கட்சித் தலைவர், மேடையை விட்டு இறங்கினதும் நேரா வேங்கைவயலுக்குப் போய் ஒரு வாய் தண்ணீர் குடிச்சிருக்க வேணாமா; அப்போதானே அரசு தன் விசாரணையை தீவிரப்படுத்தும்! இப்போகூட பாரு... 'ஒரு மாணவி பாதிக்கப்பட்டதுக்கு அப்புறம் 'அண்ணனா நிற்பேன்'னு சொல்றாரு; அரசாங்கம், 'இனிமே தப்பு நடக்காம பார்த்துக்குறோம்'னு சொல்லுது; இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?''டேய்... டேய்... நீ பேசுறதைப் பார்த்தா வர்ற தேர்தல்ல...''கண்டிப்பா ஜோசப் விஜய் கட்சிக்குதான் ஓட்டு போடுவேன்!''ஹா... ஹா... அதானே பார்த்தேன்!'