முதல்வரே... நன்றி
செய்தி: 'முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்' விதிகளின்படி 18 வயது பூர்த்தியாகியும், முதிர்வு தொகை பெற முடியாமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாய் அலைக்கழிக்கப்பட்ட தேனி மாணவி! செப்டம்பர் 21, 2025 தேதியிட்ட நமது 'அவியல்' பக்கத்தின், 'முதல்வரே... ஒரு நிமிஷம்' பகுதியில், தன் அலைக்கழிப்பு விபரங்களை சொல்லி இருந்தார் செரினா பிரின்ஸி. கூடவே, துயர் மிகுந்த வாழ்க்கை சூழலில், திருச்சி துவாக்குடி அரசு கலைக்கல்லுாரியில் முதுகலைப் படிப்பில் பயில்வதையும் பகிர்ந்திருந்தார். இச்செய்தி வெளியான 5 வது நாளில்... அரசு நடவடிக்கை: 'வணக்கம். உங்களது விண்ணப்பத்தை சென்னை அலுவலகத்திற்கு அனுப்பியாயிற்று. விரைவில் முதிர்வு தொகை வங்கி கணக்கில் வரவாகி விடும்' என்று தொலைபேசியில் அழைத்துச் சொல்லி இருக்கிறது பெரியகுளம் சமூகநலத் துறை அலுவலக குரல் ஒன்று! 'சொன்னதைச் செய்தது' முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசு; கடந்த அக்டோபர் 9ம் தேதியன்று முதிர்வுத்தொகையான ரூ.48 ஆயிரத்து 500 வரவானது! செரினாவின் நன்றி... முதல்வரே... நன்றி; 'பெண் குழந்தைகளது உயர் கல்விக்கு இத்திட்டம் உதவும்' என்ற உங்களது சொல் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. துவண்டு போயிருந்த எனக்கு உதவிய 'தினமலர்' நாளிதழே... உனக்கு பெரும் நன்றி; ஒரு ஏழைத்தாயின் மகளது கல்விக்கு நீ உதவி இருக்கிறாய்; மீண்டும் இதயம் கனிந்த நன்றி.