முதல்வரே... ஒரு நிமிஷம்!
செய்தி: அரசு தந்த காலனி வீட்டின் சிதிலத்தை சீரமைக்க தவிக்கும் பெண்!அநீதி: உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தும் அரசுத்துறைகளால் அலைக்கழிப்பு!'துாய்மை பணியாளர்கள் அல்ல... துாய உள்ளம் கொண்ட பணியாளர்கள்' எனும் உமது குரல் எனக்கு கேட்டது போல், எனது அழுகுரல் உமக்கு கேட்கிறதா அரசே?தென்காசி ஒப்பந்த துாய்மை பணியாளரான நான் ராயம்மாள். முள்ளிக்குளம் கிராமத்தில் அரசு தந்த காலனி வீட்டில் கணவர் மாடசாமி மற்றும் இரு மகன்களோடு 25 ஆண்டு காலமாக வசித்து வந்த நான், மரண பயம் காட்டிய விரிசல் விழுந்த சுவரால் தற்போது அங்கு இல்லை! வீட்டை சீரமைத்து தரக்கோரி அக்டோபர் 21, 2024ல் ஆட்சியரிடம் கொடுத்த மனுவிற்கு அடையாள எண்:10359746ம், டிசம்பர் 23, 2024ல் மீண்டும் கொடுத்த மனுவிற்கு அடையாள எண்:10687270ம் கிடைத்ததே ஒழிய பலன் இல்லை! 'தென்காசி மாவட்டம், கடையநல்லுார் வட்டம், மலையடிக்குறிச்சி கிராமம், புல எண்:422A/13 - பரப்பு 00080 ச.மீ., பட்டா எண்:1710ற்கு, ஆதி திராவிடர் நலத்துறையால் இணையவழி பட்டா வழங்கப்பட்டு அரசின் காலனி வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது' என்று மலையடிக்குறிச்சி வி.ஏ.ஓ., சான்றிதழ் தந்தும், அதனுடன் உரிய ஆவணங்களை இணைத்து நான் மனு வழங்கியும் எனக்கு 'விடியல்' இல்லை! 'துாய்மை பணியாளர்களுடன் முன்கள வீரனாக எப்போதும் துணை நிற்பேன்' என்று பதிவிடுவது மட்டும்தான் கடமையா அரசே?