உள்ளூர் செய்திகள்

திருக்குறள்: குறள் சொல்லும் குரல்

ஷீலா எனும் போராளி'உடல், மன வலிகள் எனக்கு மரத்துப் போச்சு; மூன்று புற்றுநோய் அறுவை சிகிச்சை, மணமுறிவு, உறவுகளின் தொடர் மரணம்... இதுல இருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்தது இந்த விளையாட்டுகள்தான்!' யார் குரல்? பெயர்: ஸ்ரீ.ஷீலா வயது: 58 அடையாளம்: தடகள வீராங்கனை இவரது பிறப்பிடம் கேரளாவின் திருச்சூர். விளையாட்டு பிரி வினருக்கான இடஒதுக் கீட்டில், 18 வயதில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணி வாய்ப்பு பெற்று, சென்னை, மேற்கு முகப்பேரில் வசித்து வருகிறார். குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகளில், 55 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில், சர்வதேச, தேசிய, மாநில அளவில் கடந்த ஓராண்டில் இவருக்கு 10 வெற்றிகள்! இருப்பினும், கடந்த மே மாதம் இலங்கையில் நடை பெற்ற சர்வதேச போட்டியில், மூன்று தங்கம், ஒரு வெள்ளி பதக்கத்துடன் பெற்ற 'ஒட்டு மொத்த சாம்பியன்' பட்டம் இவருக்கு பெரும் மனநிறைவை தந்திருக்கிறது. காரணம்... அக்டோபர் 2025ல் பெருங்குடல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை முடித்த ஏழாவது மாதத்தில், இவர் இதனை சாதித்திருக்கிறார். எப்படி இது சாத்தியமானது ஷீலா? உண்மையை சொல்லணும்னா இது அத்தனைக்கும் காரணம் விதி. 2013ம் ஆண்டு என் கருப்பை, சினைப்பையில எனக்கு மூன்றாம் நிலை புற்று இருக்குறது தெரியவந்தது! கதிர்வீச்சு சிகிச்சை 24 தடவை, 'கீமோதெரபி' 6 தடவை, அடுத்தடுத்து இரு அறுவை சிகிச்சைன்னு பெரும் ரணம்! 'உன்னால உன் கணவரும் இந்த கஷ்டங்களை எதுக்காக அனுபவிக்கணும்'னு எண்ணம்; 45 வயசுல என் உடல்வலி உச்சத்துல இருந்தப்போ என் கணவரை விட்டு விலகிட்டேன். காலம் எனக்கு தந்த இந்த சோதனைகள்தான் என் எல்லா சாதனைகளுக்கும் காரணம்! வாழ்க்கையை நீங்கள் சாபமாக உணர்ந்ததே இல்லையா? பெருங்குடல்ல புற்றுன்னு 2025ல் கண்டுபிடிச்சு, பெருங் குடல்ல 40 சதவீதத்தை நீக்கின 6வது நாள்; நான் விழுங்கின துளியூண்டு தண்ணீர் அவ்வளவு ருசியா இருந்தது; 'டிஸ்சார்ஜ்' ஆகி வெளியே வர்றப்போ என் முகத்துல மோதின காற்றுல நான் உணர்ந்த சுகம் இருக்கே... அப்பப்பா... 'இதான்... இதான் வாழ்க்கை; இவ்வளவுதான் வாழ்க்கை'ன்னு அந்த தருணங்கள்ல புரிஞ்சது. இன்னைக்கும், எனக்கு கஷ்டம் தர்ற யார் மேலேயும் எனக்கு கோபம் வர்றதில்லை; இந்த மனவலிமை, என் துயரங்கள் எனக்கு தந்த வரம். அம்மா, அப்பா, தங்களுடன் பிறந்தவர்கள்...? இருந்தாங்க... இப்போ இல்லை. ஜூலை, 2024ல் அப்பா, மார்ச், 2025ல் அம்மா போயாச்சு. எனக்கு மகனா இருந்த ஒரே தம்பியும் ஜூலை, 2025ல் போயிட்டான்; அவனுக்கும் புற்று. என்னோட வலிகளுக்காக ஒரு நாளும் அழாத நான் அன்னைக்கு அழுதேன்; கடவுள் மேல கோபப்பட்டேன். உங்கள் வாழ்க்கையில் இன்னும் என்ன இருக்கிறது? என்ன இப்படி கேட்டுட் டீங்க; 'ஆசிய' கோப்பை, ' ஒலிம்பிக்' பதக்கம் இரண்டும் எனக்காக காத்திருக்குதே. குரல் சொல்லும் குறள்: எண்: 625 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும் பொருள்: விடாமல் மென்மேலும் துன்பம் வந்த போதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !