நாங்க என்ன சொல்றோம்னா...: ஆப் ஜெய்சா கோய் (ஹிந்தி)
அவனுக்கு 42... அவளுக்கு 32!அவன் சமஸ்கிருத ஆசிரியர்; அவள் பிரெஞ்சு ஆசிரியை. அவன் வாழ்வில் காதல் அத்தியாயமே இல்லை; அவளுக்கு முன்னாள் காதலன்கள் உண்டு. பரஸ்பரம் சம்பந்தமில்லா வாழ்க்கை நிலையில் உள்ள இவர்களுக்கு இடையிலான ஒரே ஒற்றுமை... டீ; 'அவனுக்கும், அவளுக்கும் திருமணம் சரிப்பட்டு வருமா?' என்பதற்கு விடை தருகிறது க்ளைமாக்ஸ்!'தனிமையில இருக்குறவங்க சந்தோஷத்துலேயும் வருத்தத்துலேயும் பார்க்குறதுக்கு ஒரே மாதிரிதான் இருப்பாங்க' என்று தன் தனிமை பெருங்கடலை அவளுக்கு உணர்த்தும் காட்சியில் அவன் அழகன்; 'அடுத்ததடவை இன்னும் தாமதமா வா; நேசிக்கிறவங்களுக்காக காத்திருக்கிற சுகத்தை நான் நிறைய அனுபவிக்கணும்' என்று அவளிடம் சொல்கையில் அவன் பேரழகன்; அவன்... மாதவன்!'காதல் என்றால் இரண்டுபேர் சேர்ந்திருப்பது' என்று கருதும் அவனுக்கு, 'காதல் என்றால் மனம் சேர்ந்த இருவர், மரியாதை, அன்பு, சுதந்திரத்தை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது' என்று புரிய வைக்கும் அவளாக தங்கல் புகழ் பாத்திமா சனா ஷேக்.மாதவனின் 'அண்ணன் - அண்ணி' சார்ந்த கிளைக்கதை, பாத்திமாவின் முன்னாள் காதலன் மூலம் ஒரு திருப்பம் என பழக்கப்பட்ட விஷயங்கள் ஏராளம்; இவற்றை புறம்தள்ளி, வயதால் இருவேறு நிலைகளில் உள்ளவர்கள் தம்பதியாக இணைவதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி இன்னும் அலசியிருக்கலாம்! ஆண்களுக்கு அறிவுரை சொல்லும் பாணி திரைக்கதை, தேர்ந்த நடிகர்களால் திகட்டவில்லை. கலாசாரம், குடும்பம், ஆண் மைய சிந்தனை ஆகியவற்றை கொண்டு பல படைப்புகள் முன்வைத்த பிரச்னைகளையே இப்படைப்பும் முன்வைக்கிறது எனினும் நியாயமாய் இருப்பதால் மனம் ஏற்கிறது.ஆக....'கல்யாண கனவு' பலிக்காத 90'ஸ் கிட்ஸ்களுக்கு நம்பிக்கையூட்டும் படைப்பு!