உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: மை லார்ட்

மீண்டும் மனிதம் போற்றுகிறார் சசிகுமார்'டயாலிசிஸ்' தயவில் வாழும் மத்திய அமைச்சருக்கு சிறுநீரகம் தரும் தகுதி கோவில்பட்டி முத்து சிற்பிக்கு மட்டுமே இருக்கிறது; எலி பிடிக்க பொறியில் வைக்கப்படும் வடையாக முத்து சிற்பி மற்றும் அவரது மனைவி சுசீலாவுக்கு பலவித சேவகம் செய்கிறது அமைச்சர் தரப்பு; பொறியில் சிக்கியது என்ன? 'தங்களின் உரிமைக்காக கவுன்சிலர் முதல் அரசு மருத்துவர்கள் வரை நிற்கும் சாமானியர்கள் எப்படியெல்லாம் நசுக்கப்படுகின்றனர்' என்கிற ஜோக்கர் பட அரசியலை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்; வசனம், கதாபாத்திர வார்ப்பு அனைத்திலும் அதிகார மையத்தினரை பகடி செய்திருக்கிறார்! அன்றாட வாழ்வில் உழைப்பு ரீதியிலும், உரிமைரீதியிலும் சுரண்டப்படும் மக்கள் டாஸ்மாக், 'ரீல்ஸ்' என்று கரைந்து போவது; 'நேர்மையின் வழியில் பயணப்படுவதை விட குறுக்கு வழிகளை விரும்பும் மக்களின் மனங்கள்' பற்றி சொல்லும் காட்சிகள்... இன்றைய சமூக யதார்த்தத்தின் 100 சதவீத பிரதிபலிப்பு! முத்து சிற்பிக்கான ஒப்பனையில் சசிகுமார் தெரிந்தாலும், ஏதோவொரு தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சி அடுக்கும் சுசீலாவாகவே தெரிகிறார் சைத்ரா. சுவாரஸ்யமான கதையோட்டத்தின் இடையே எட்டிப் பார்க்கும் திரைக்கதை தொய்வு, இக்கதையிலும் தலை நீட்டுகிறது. இரண்டாம் பாதி திருப்பத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது ஒரு குறை! 'காய்வதில்லை பூமியிலே கருணை ஆற்றின் ஈரம்...' எனும் யுகபாரதியின் வரிகளை இன்னும் ஈரமாக்கித் தருகிறது ஷான் ரோல்டனின் இசை. ஏழைகளின் வாழ்வை சிதிலமடைந்த தோற்றத்தில் காட்டாமல், அவர்களின் எளிமையை அழகியலாக காட்டியிருக்கிறது நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு! ஜப்பான் ஏற்படுத்திய காயத்தின் மீது களிம்பு பூசியிருக்கிறார் ராஜு முருகன். கோபம் கொண்டு அதிகார வர்க்கத்தை எதிர்க்காத இக்கருணை கதையை மென்மை விரும்பிகள் போற்றலாம். ஆக...ரூ.5,000, 10 ஆயிரம் எதற்கும் மயங்காத மனங்களை மயக்கும் படைப்பு இது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !