செல்லப்பிராணிகளுக்கான தேவை கொட்டி கிடக்கும் சேவை
''பிறந்த குழந்தைகளை பராமரிக்க, உடனிருந்து பார்த்துக்கொள்ள, 'பேபி சிட்டர்'களை பணிக்கு அமர்த்துவதை பார்த்திருப்பீர்கள். இதேபோல, 'பெட் சிட்டர்' வேண்டி எங்களிடம் பலரும் அணுகுகின்றனர். செல்லப்பிராணியை குளிப்பாட்டி, வாக்கிங் அழைத்து செல்வது முதல், அதன் இறுதிமூச்சுக்கு பின் நல்லடக்கம் செய்வது வரை, ஒவ்வொரு நிலையிலும், செல்லப்பிராணி மற்றும் அதன் உரிமையாளருக்கான தேவையை பூர்த்தி செய்ய, நிறைய தொழில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன,'' என்கிறார் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'பா ஸ்பேஸ்' நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக்.பெங்களூரு, ஜெயநகரில், செல்லப்பிராணிகளுக்கான சேவைகளுக்கு, 'பா ஸ்பேஸ்' (Paw Space) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வரும், இவர் நம்மிடம் பகிர்ந்தவை:அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், இரு வீடுகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் செல்லப்பிராணிகள் இருக்கின்றன. இந்தியாவில், கொரோனா காலக்கட்டத்தில், செல்லப்பிராணி வளர்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. தற்போதைய இளம் தம்பதிகள் குழந்தை பேறுக்கு முன்பு, பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது எப்படி என்பதை கற்று கொள்ள, செல்லப்பிராணியை தத்தெடுத்து வளர்க்கின்றனர். தனிமையை விரட்ட, மன அழுத்தம் போக்க, குழந்தைக்கு துணையாக என, பல்வேறு காரணங்களுக்காக செல்லப்பிராணி வளர்க்க பலரும் விரும்புவதால், அவைகளுக்கான சேவை துறைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.இச்சூழலை பயன்படுத்தி கொள்ளலாம் என முடிவெடுத்து, நண்பர்கள் பிரசாத், மகேஷ் மற்றும் ஸ்வேதா இணைந்து, பா ஸ்பேஸ் நிறுவனத்தை உருவாக்கினோம். ஏற்கனவே, அமெரிக்காவில் செயல்படும் ரோவர் டாட் காம் நிறுவனத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இத்திட்டத்தை கையில் எடுத்தோம்.தற்போது பெங்களூருவில் மட்டும், 10க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகிறோம். ஐதாராபாத்திலும் எங்கள் கிளை உள்ளது. அடுத்த கட்டமாக, சென்னை, கோவை, பூனே, மும்பைபோன்ற நகரங்களில் கிளைகள் துவங்க திட்டமிட்டுள்ளோம். மேலைநாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில விஷயங்களை, பெங்களூருவில் அறிமுகப்படுத்திய போது, நல்ல வரவேற்பு இருந்தது.குறிப்பாக, ஹோம் போர்டிங் முறைக்கு அதிக ஆதரவு உள்ளது. அதாவது, செல்லப்பிராணியை கென்னல் போன்ற அறிமுகமில்லாத இடத்தில் தங்க வைக்காமல், எங்களிடம் பதிவு செய்துள்ள விலங்கு நல ஆர்வலர்களின் வீடுகளில் தங்க வைப்பதாகும். கிட்டத்தட்ட 1,500க்கும் மேற்பட்ட செல்லப்பிராணி பராமரிப்பாளர்கள், எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் முகவரிக்கு நேரில் சென்று, உரிமையாளர் விரும்பினால், தங்களின் பப்பியை விட்டு செல்லலாம். பப்பியின் நடவடிக்கைகளை பராமரிப்பாளர்கள், வீடியோ எடுத்து உரிமையாளர்களுக்கு அப்டேட் செய்வர். வீடு போன்ற அமைப்பில் அவை இருப்பதால், எவ்வித பயமும் இன்றி, மகிழ்ச்சியாக இருப்பதாக, வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.குழந்தையை பராமரிக்க, 'பேபி சிட்டர்' நியமிப்பது போல, தங்களின் வீட்டில் தங்கி, செல்லப்பிராணியை பார்த்து கொள்ள, 'பெட் சிட்டர்' வேண்டுமென, பலரும் அணுகுகின்றனர். வீட்டிற்கு சென்று குரூமிங் செய்வது, பயிற்சி அளிப்பது, செல்லப்பிராணியை வாக்கிங் அழைத்து செல்வது போன்ற எல்லா சேவைகளும், பப்பி இருக்குமிடத்திற்கு சென்று வழங்குகிறோம்.செல்லப்பிராணியை வெளியில் அழைத்து செல்ல பெட் டாக்ஸி உள்ளது. அவை விரும்பும் உணவை பிரஷ்ஷாக தயாரித்து அளிக்கிறோம். இதுதவிர, வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு குடிபெயருவோர், எங்களை அணுகினால்,செல்லப்பிராணியை பத்திரமாக, புதிய முகவரிக்கு கொண்டு போய் சேர்க்கிறோம்.இதையெல்லாம் தாண்டி செல்லப்பிராணி இறந்துவிட்டால், அதை நல்லடக்கம் செய்வது, அதன் அஸ்தியை உரிமையாளரிடம் ஒப்படைப்பது வரை, எல்லா பணிகளும் மேற்கொள்கிறோம். இவையெல்லாம், செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு தேவைப்படுவதாக கூறுகின்றனர்.எல்லா நகரங்களுக்கும் இச்சேவைகள் அனைத்தும் தேவைப்படாது. செல்லப்பிராணி வளர்ப்பவர்கள், அதன் நலனில் அக்கறை கொண்டவர்கள், சேவை சார்ந்த துறைகளின் தேவையை பொறுத்து, களத்தில் குதித்தால் வெற்றி பெறலாம். ஆர்வமும், ஈடுபாடும், பொறுப்புணர்வும் இருந்தால், இத்துறையில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.