உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / குள்ள குள்ள வாத்து செல்லமாய் வளர்க்கலாமா?

குள்ள குள்ள வாத்து செல்லமாய் வளர்க்கலாமா?

நீ ளமான கழுத்து, தட்டையான மூக்கு, சிமிட்டும் கண்களோடு, சிங்காரமாய் நடக்கும் வாத்துகளை, உங்கள் செல்லப்பிராணியாக எப்படி வளர்க்கலாம் என கூறுகிறார், தர்மபுரியை சேர்ந்த, 'மஞ்சு பால்ட்ரி பார்ம்' (Manju Poultry farms) மஞ்சுநாதன்.

'செல்லமே' பக்கத்திற்காக இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

நிலம், நீர் என இரண்டு சூழலிலும் வாழ்வதாலேயே வாத்துகளை அரண்மனை, பங்களாக்கள், மாளிகைகளில் அந்தக்காலத்தில் வளர்த்தனர். நிறைய வகை வாத்துகள் இருந்தாலும் சில வெரைட்டியை தற்போதும் பலர் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். என்னுடைய பண்ணையில், மணிலா, கூஸ், வெள்ளை பெக்கின், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாட்டு இன வாத்துகள் இருக்கின்றன. இவற்றை ஜோடியாக வாங்கி வளர்ப்பதே சிறந்தது. சிறிய இடத்திலும் வாத்து வளர்க்கலாம். தீவனம் வைக்கும் போது தண்ணீரும் இருப்பது அவசியம். வீட்டில் வளர்ப்பதாக இருந்தால், கூண்டில் இருந்து திறந்துவிடும் போது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்தால், அதுவே தன் இறகை நனைத்து விளையாடி மகிழ்வதை கண்டு ரசிக்கலாம். மணிலா வாத்து இது கருப்பு, வெள்ளை, இரண்டும் கலந்த நிறம் என மூன்று நிறங்களில் உள்ளன. அதிகபட்சம் இரண்டு கிலோ எடை மட்டுமே இருப்பதால், சிறிது துாரம் வரை பறக்கும். எங்கே சென்றாலும் மீண்டும் வீட்டை வந்தடைந்துவிடும். இது முட்டையிட ஆரம்பிக்கும் பருவத்தில், மறைவான இடத்தையே அதிகம் தேடி செல்லும். கூண்டில் வளர்ப்பதாக இருந்தால், அதற்குள் மறைவாக ஓரிடம் அமைப்பது அவசியம். இது, முட்டைகளை, குஞ்சு பொரிக்கும் வரை பத்திரமாக பார்த்துக்கொள்ளும். அதிக தீவனம் வைத்து உடல் பருமனாகிவிட்டால், கால் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், உணவு விஷயத்தில் மட்டும் கறாராக இருக்க வேண்டும். பிறந்து ஆறு மாதம் ஆன ஒரு ஜோடி மணிலா வாத்தின் விலை, 3 ஆயிரம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது. கூஸ் வாத்து இதை சிலர் மடை வாத்து, பங்களா வாத்து என்றும் செல்லமாக அழைக்கின்றர். இது ஜெர்மன் நாட்டை சேர்ந்தது. வெள்ளை, பிரவுன் என இரு நிறங்களில் உள்ளன. மணிலாவும், கூஸ் வாத்தும், அதிகபட்சம் 16 ஆண்டுகள் வரை உயிர்வாழும். இதுவும், தன் வாரிசுகளை பார்த்து கொள்வதில் அதிக அக்கறை காட்டும். அதீத சுறுசுறுப்பாக இருக்கும். இதன் இறகால், இறகு பந்து, தலையணை, கைவினை பொருட்கள் செய்கின்றனர். தற்போது, சீனா, ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த கூஸ் வாத்துகளையே பலரும் விரும்பி வாங்குகின்றனர். ஒரு ஜோடி கூஸ் வாத்து, 6 ஆயிரம் ரூபாய். வெள்ளை பெக்கின் பெயருக்கு ஏற்றார்போல, வெள்ளை நிறத்தில் மட்டுமே பெக்கின் வாத்துகள் காணப்படும். இதை வளர்ப்பது மிக எளிது. வீட்டில் இருக்கும் மீதமுள்ள காய்கறி கழிவுகள், நெல், அரிசி, சோறு, சிறுதானியங்கள் என எதை வேண்டுமானாலும் சாப்பிடும். பிறந்த 40 நாட்களிலேயே, இரண்டரை கிலோ வரை உடல் எடை எடை இருக்கும். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், பருவகால நோய்கள் எளிதில் தாக்காது. அதிகபட்சம், 5-6 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர்வாழும். செல்லப்பிராணியாக வளர்த்தால், வீட்டிலுள்ளோரிடம் எளிதில் நெருங்கிவிடும். இது பிறந்து ஒரு மாதத்தில் இருந்தே விற்கப்படுகிறது. ஒரு ஜோடி குட்டி வெள்ளை பெக்கின் 300 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி