பணி நிமித்தமாக, சித்ராவும், மித்ராவும் கலெக்டர் அலுவலகம் சென்றிருந்தனர். நுழைவாயிலில் பாதுகாப்புக்காக போலீசார் நின்றிருந்தனர்.அதைப்பார்த்த சித்ரா, ''என்ன, மித்து! ரெண்டு துணை கமிஷனர்களையும் ஒரே நேரத்துல துாக்கிட்டாங்களே... இவுங்க நம்மூருக்கு வந்து மூணு வருஷம் ஆகலையே...'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''அக்கா... ஒருத்தரு, கமிஷனர் ஆபீஸ் வளாகத்திலேயே உட்கார்ந்து, 'தில்'லா கட்டப்பஞ்சாயத்து செஞ்சுக்கிட்டு இருந்தாரு. வயசான ஒருத்தர் நிலத்தை அபகரிக்க 'பிளான்' போட்டு, நேருக்கு நேராவே மிரட்டுனாரு... இது மாதிரி... ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் போயிருக்கு. லோக்சபா எலக்சன் வரப்போகுது; தேவையில்லாத பிரச்னை வரக்கூடாதுன்னு துாக்கிட்டாங்களாம். இன்னொருத்தரு, செல்வாக்கை பயன்படுத்தி, டிரான்ஸ்பர் வாங்கிட்டு கிளம்புறாராம்,'' வசூலுக்கு மூவர்
''குனியமுத்துார் ஸ்டேஷனை பத்தி, ஏகப்பட்ட புகார் வருதாமே...''''ஆமாக்கா... உண்மைதான்! அங்க இருக்கற ஒரு போலீஸ் ஆபீசரும், மூனு போலீஸ்காரங்களும் கூட்டணி வச்சுக்கிட்டு, 'கலெக்சன் மேளா' நடத்துறாங்க. கஞ்சா, லாட்டரி, அரிசி கடத்தல், 24 x 7 'சரக்கு' சேல்ஸ்ன்னு எல்லாமே கொடிகட்டி பறக்குது,''''மூனு நம்பர் லாட்டரி விக்கறவங்ககிட்ட, 'தர்கா புகழ்' ஊர்ப்பேரைக் கொண்ட ஒரு போலீஸ்காரரும், அரிசி கடத்தல்காரங்ககிட்ட 'கருப்பான' ஒரு போலீஸ்காரரும், டாஸ்மாக் பார், ஓட்டல், பேக்கரி, தள்ளுவண்டிக்கடைன்னு எல்லா இடங்கள்லயும், 'முத்தான' ஒரு போலீஸ்காரரும் வசூல் பொறுப்பை, சிறப்பா செஞ்சுக்கிட்டு இருக்காங்க,''''ஸ்டேஷன் ஆபீசருக்கு கப்பம் சரியா வர்றதால, மூவரணி ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகுதாம். 200, 500 ரூபாயைக் கூட விட்டு வைக்கறதில்லையாம். இந்த வசூலுக்கு, மூணு ஸ்டேஷனுக்குப் பொறுப்பா, மூணு வருஷமா இருக்குற ஆபீசரும், பகிரங்கமா சப்போர்ட் செய்றாராம்,'' ஓடுது சாராய ஆறு!
''அதெல்லாம் இருக்கட்டும். டாஸ்மாக் பார்கள்லயும் கெடுபிடி குறைஞ்சிடுச்சாமே... இல்லீகலா எந்நேரமும் 'சரக்கு' விக்கிறதா சொல்றாங்க...''''சாய்பாபா காலனி லிமிட்டுல மட்டும், ஆறு டாஸ்மாக் கடைகள் இருக்கு. இதுல, ரெண்டு கடையில மட்டும், 24 மணி நேரமும் 'சரக்கு' விக்கிறதுக்கு, போலீஸ்காரங்க பர்மிஷன் கொடுத்திருக்காங்களாம். ஆனா, ஆறு 'பார்'களுக்குமான மாமூலையும், ரெண்டு 'பார்'களை நடத்துற ஆளும்கட்சியைச் சேர்ந்த ரெண்டு பேரும் கொடுக்குறாங்களாம்,''''அந்த ரெண்டு பேர்ல ஒருத்தரு, ஆளுங்கட்சிக்காரரு; மதுரைக்குப் பக்கத்துல கவுன்சிலரா இருக்குற அவரு, நம்மூர்ல ஏகப்பட்ட டாஸ்மாக் பார்களை நடத்துறாரு.இன்னும் சிலரோட சேர்ந்து, ரெண்டு எப்.எல்., 2 பார்களையும் நடத்திட்டு வர்றாராம். அதுல... வரம் தரும் மரம் பெயரைக் கொண்ட ஒரு பார்ட்னர் மட்டுமே, ஏழு எப்.எல்., 2 பார் நடத்துறாராம். இவங்க, டாஸ்மாக் பார் சரக்கை கொண்டு போய், எப்.எல்., 2 பார்ல கூடுதல் விலைக்கு வித்து காசு பார்ககுறாங்களாம்,''''இதே மாதிரி, ஆர்.எஸ்.புரம் ஏரியாவில ரெண்டு டாஸ்மாக் பார்களை ஆளும்கட்சிக்காரர் ஒருத்தர் பல மாதங்களா கவர்மென்டுக்கு, 'டிடி' கட்டாமலே நடத்திட்டு வர்றாராம். அங்கேயும், 24 மணி நேரமும் 'சரக்கு' சப்ளை தாராளமா நடக்குதாம். இந்த 'உற்சாக பான' உடன்பிறப்பு, பல்வேறு டாஸ்மாக் கடைகள்ல வேலை பார்க்கற ஊழியர்கள் கிட்ட, தினமும் ஆயிரம் ரூபா மாமூல் வாங்கிக்கிட்டிருக்காரு. இந்தத் தொகை கொடுக்காத ஊழியர்களை, 'டிரான்ஸ்பர்' அல்லது 'சஸ்பெண்ட்' பண்ணிருவேன்னு மிரட்டுறாராம்,'' 'லஞ்ச'த்துக்கு வாய்ப்பு
''திரும்பி வந்துட்டோம்னு சொல்லுங்கன்னு, வீட்டு வசதி வாரிய ஊழியர்கள் கெத்து காட்டுறாங்களாமே...''''அதுவா... வீட்டு வசதி வாரிய மண்டல அலுவலகத்துல வேலை பார்த்த, லஞ்சத்துல திளைத்த, 13 ஊழியர்கள் மேல, ஏகப்பட்ட புகார் கவர்மென்ட்டுக்கு போச்சு. 'என்கொயரி' நடத்தி, ஒவ்வொருத்தரையும் வெவ்வேறு ஊர்களுக்கு துாக்கியடிச்சாங்க; ஒருத்தரை கூட விட்டு வைக்காம, 13 பேரையும் மாத்துனாங்க...''''இதுல சில பேரு... 'பார்க்க' வேண்டியவங்களை 'பார்த்து', செய்ய வேண்டிய 'சீர்வரிசை'களை செஞ்சு, மறுபடியும் நம்மூருக்கே 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு வந்திருக்காங்க.அவுங்களுக்கு, ஏற்கனவே கவனிச்சு வந்த, 'கரன்சி மழை' கொட்டுற பணியிடத்தையே, திருப்பிக் கொடுத்திருக்காங்க,''''இப்போ, அவுங்க, 'எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது; எங்களுக்கு மேலிடத்துல செல்வாக்கு இருக்கு தெரியுமா'ன்னு கெத்து காட்டுறாங்களாம்.இதனால, ஆபீசரே நடுநடுங்கிப் போயிருக்காராம். அந்த மூனு பேரை கேட்டுத்தான், ஆபீசரே செயல்படுறாருன்னா... வீட்டு வசதி வாரியம் எந்த அளவுக்கு மோசமா போயிட்டு இருக்குன்னு பார்த்துக்குங்க,''இருவரும் பேசிக்கொண்டே, கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றிப்பார்த்தனர். 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிக்கான விழிப்புணர்வு வாகனம், அவர்களை கடந்து சென்றது. அமைச்சர் பெயரில் வசூல்
சித்ரா, ''வாரிசு அமைச்சர் பெயரைச் சொல்லி, ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரு, லட்சக்கணக்குல சுருட்டிட்டாராமே... 'என்கொயரி' நடக்குதுன்னு கேள்விப்பட்டேனே...'' என கேட்டாள்.''அந்தக் கூத்தை ஏன் கேக்குறீங்க. பொறுப்பு அமைச்சரா செந்தில்பாலாஜி இருந்தப்போ, மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரையும், தி.மு.க.,வுக்கு அழைச்சுட்டு வந்து, பெருவிழா நடத்தி, செல்வாக்கை காட்டுனாரு,''''அப்படி வந்தவங்கள்ல பலரும் ஒதுங்கி இருக்காங்க. சில பேரு, பலரையும் ஏமாத்தி கரன்சி பார்க்குறாங்களாம். 'பூச்சி'யை 'ஊர்' பேருல இணைச்சு, அடைமொழியா வச்சிருக்கற ஒருத்தரு, த.மா.கா.,வுல இருந்து வந்த ஒருத்தருக்கு, மொபைல்போன்ல பேசியிருக்காரு.அப்போ, 'சின்னவர் ஆபீசுல இருந்து உங்களை கூப்பிட்டாங்களா'ன்னு கேட்டிருக்காரு. 'இல்லையே'ன்னு சொன்னதும், இன்னும் கொஞ்ச நேரத்துல கூப்பிடுவாங்க; வெள்ள நிவாரண நிதி வசூலிக்கச் சொல்லியிருக்காங்க. நீங்க கண்டிப்பா பணம் தரணும்னு சொல்லியிருக்காரு,''''சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்துல, அழைப்பு வந்திருக்கு. 'சின்னவர்' ஆபீசில் இருந்து பேசுறோம்; வெள்ள நிவாரணத்துக்கு நிதி கொடுங்க'ன்னு சொல்லியிருக்காங்க.சோறு சாப்பிட்ட கையால காக்கா கூட விரட்டாத அந்த நிர்வாகி, ஒரு போன் அழைப்பை உண்மைன்னு நம்பி, ஆறரை லட்சம் ரூபாயை, அள்ளிக் கொடுத்திருக்காரு. இருந்தாலும், மனசுல லேசா சந்தேகம் வந்துருக்கு,''''உடனே, சென்னையில இருக்குற அமைச்சர் ஆபீசுக்கு போன் போட்டு, விசாரிச்சிருக்காரு. 'அப்படியா... ஆபீசுல இருந்து யாருக்கும் எந்த உத்தரவும் போடலையே...'ன்னு சொன்னதும், ஏமாந்துபோன விஷயம் தெரிஞ்சிருக்கு.உடனே, மோசடி செஞ்ச ஆசாமியை 'வெளுக்கு'றதுக்காக, ஆதரவாளர்களை அழைச்சுக்கிட்டு வந்திருக்காரு. கட்சிக்காரங்க அவரை சமாதானம் செஞ்சு, ஐந்தரை லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்திருக்காங்க... இன்னும் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கலையாம்,'' சிறப்பில்லாத'கோவை விழா'
''அதெல்லாம் இருக்கும்... 'கோவை விழா' நடத்துனாங்களே... அதைப்பத்தி எதுவுமே சொல்லலையே...''''அதைப்பத்தி 'சிறப்பா' சொல்றதுக்கு 'பெருசா' விஷயம் இல்லப்பா... வெகுஜன மக்களுக்கு பிரயோஜனமா எந்த விஷயமும் நடத்தலை. சம்பிரதாய சடங்கு மாதிரி நடத்தி இருக்காங்க. வேளாண் பல்கலையில நடந்த ஒலி, ஒளி காட்சி மட்டுமே சொல்ற மாதிரி இருந்துச்சாம்; அவ்ளோ தான்,'' அறிக்கை மர்மம்
''பாரதியார் பல்கலையில அறிக்கை வெளியிடுறதுக்கு 'லேட்' பண்றதா சொன்னாங்க...''''ஆமாப்பா... சிண்டிகேட் கூட்டம் நடத்தி, ஒரு மாசமாச்சு; இன்னும் அந்த கூட்டத்தோட இறுதி அறிக்கைய வெளியிடாம இருக்காங்க. எட்டு கோடி ரூபா மதிப்புக்கு, பல்கலைக்கு தேவையான பொருட்களை வாங்கியிருக்காங்களாம். இதுக்கு ஒப்புதல் கொடுத்து, அறிக்கை கொடுத்தா மட்டுமே பணம் 'செட்டில்மென்ட்' பண்ண முடியுமாம். ஆனா, இன்னும் அறிக்கை கொடுக்காம 'லேட்' பண்ணிட்டு இருக்காங்களாம். இதனால, பல்கலை வட்டாரத்துல சர்ச்சை ஏற்பட்டிருக்குது,'' விளையாட்டுல விளையாட்டு
''இதே பல்கலையில இருக்குற உடற்கல்வி துறையை சேர்ந்தவங்க, விளையாட்டுப் போட்டி நடத்துறதுலயும் சொதப்பிட்டாங்களாமே...''''அதுவா... வழக்கமா கல்லுாரிகளுக்கு இடையே நடத்துற விளையாட்டு போட்டிய, இந்த தடவை முறையா நடத்தலையாம்; தென்மண்டல பல்கலைக்கு இடையேயான போட்டிக்கும், பாரதியார் பல்கலை அணியை சரியா தேர்வு செய்யலையாம்...''''விளையாட்டு போட்டியிலும் ஏகப்பட்ட தில்லுமுல்லு வேலை நடந்திருக்கு. ஜோன் லெவல் வாலிபால் போட்டியில, ஒரு பிரைவேட் காலேஜ் விதிமுறையை மீறி விளையாடியதா, கம்ப்ளைன்ட் வந்திருக்கு. அதனால, 'இன்டர் ஜோன்' போட்டி நடத்துறதை, பாரதியார் பல்கலை நிர்வாகம் தள்ளிப்போட்டிருக்கு,''''இதுக்கு இடையில, தென்மண்டல அளவுல போட்டி நடத்துறதுக்கு தேதி அறிவிச்சிட்டாங்க. வேற வழியில்லாம, 'இன்டர் ஜோன்' போட்டி நடத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுச்சு.நம்மூர்ல வசதி இருந்தும், ஈரோட்டுல போட்டி நடத்தறதா சொல்லியிருக்காங்க. அதை உண்மைன்னு நம்பி, மண்டல போட்டியில முதல் ரெண்டு இடங்களை பிடிச்ச, எட்டு அணி மாணவர்களை ஈரோட்டுக்கு அழைச்சுட்டு போயிருக்காங்க. அங்க, போட்டியே நடத்தாம, ரெண்டு நாளைக்கு மாணவர்களை காக்க வச்சுட்டு, பல்கலை அணிக்கு நேரடியா தேர்வு நடத்தப் போறதா அறிவிச்சிருக்காங்க.''அதிலும் கூட, எட்டு அணிகளை சேர்ந்த சிறந்த வீரர்களை தேர்வு செய்யாம, ஒவ்வொரு அணியிலும் இருந்து தலா ரெண்டு வீரர்களை தேர்வு செஞ்சு அனுப்பியிருக்காங்க.கர்நாடகாவுக்கு போன அந்த அணி, முதல் ரவுண்டுலயே மண்ணை கவ்விட்டு, போட்டியில் இருந்து வெளியேறிடுச்சாம். விளையாட்டுத்துறைக்கு கவர்மென்ட் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுது.ஆனா, உடற்கல்வித்துறையில இருக்கற அரசியல்னால, வீரர்களுக்குதான் மன உளைச்சல் ஏற்படுதுன்னு புலம்பிட்டு இருக்காங்க,'' என்றபடி, முதல் தளத்துக்கு செல்ல, படியேறினாள் மித்ரா.அவளை பின்தொடர்ந்து சென்றாள் சித்ரா.